பிஸ்லெரி குடிநீர் மாதிரி பாதுகாப்பற்றது எனக் கண்டுபிடிப்பு – இந்தியாவில் அனைத்து குடிநீர் வர்த்தக நாமங்களுக்கும் பரிசோதனை!
இந்தியாவின் முன்னணி போத்தல் குடிநீர் நிறுவனமான பிஸ்லெரியின் (Bisleri) குடிநீர் மாதிரி ஒன்று பருகுவதற்குப் பாதுகாப்பற்றது என ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இந்திய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்திய ஆய்வகப் பரிசோதனையில், குறித்த குடிநீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான புரோமேட் (Bromate) இரசாயனப் பொருள் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் மேன்முறையீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக ஆய்வகப் பரிசோதனையிலும், பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) எனப்படும் இரசாயனப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, இந்தியாவின் உணவுப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் குறித்த குடிநீர் மாதிரி பாதுகாப்பற்றதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பிஸ்லெரி நிறுவனம் உள்ளிட்ட இந்தியாவில் குடிநீர் உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களினதும் தயாரிப்புகளைப் பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தரப்பை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், ஆய்வகப் பரிசோதனை முடிவுகளை பிஸ்லெரி நிறுவனம் மறுத்துள்ளது. தமது குடிநீர் நுகர்வுக்கு பாதுகாப்பானது எனவும், உற்பத்திச் செயற்பாட்டின்போது 90 இற்கும் மேற்பட்ட தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த பிரச்சினைக்குரிய உற்பத்தித் தொகுதியைச் சேர்ந்த எந்தவொரு பொருளும் தற்போது சந்தையில் விற்பனைக்காக இல்லை என்பதால், அவற்றை மீளப்பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் நிறுவனம் முன்னதாக அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தது.
இந்தியாவின் போத்தல் குடிநீர் சந்தையில் பிஸ்லெரி நிறுவனத்துடன், பெப்சிகோவின் அக்வாஃபினா (Aquafina) மற்றும் கொக்கா-கோலாவின் கின்லி (Kinley) ஆகிய வர்த்தக நாமங்களும் போட்டியிடுகின்றன.
2025ஆம் ஆண்டில் இந்தியாவின் போத்தல் குடிநீர் சந்தையின் பெறுமதி சுமார் 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இந்த ஆய்வு முடிவுகள் பிஸ்லெரியின் குறிப்பிட்ட குடிநீர் மாதிரி ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன், அந்நிறுவனத்தின் அனைத்து குடிநீர் தயாரிப்புகளும் பாதுகாப்பற்றவை என்பதை இது உறுதிப்படுத்தவில்லை.