நியூயோர்க் மாநில செனட் வரலாற்றில் முதல் பலஸ்தீனப் பெண்! அபர் கவாஸ் வரலாற்றுச் சாதனை
அமெரிக்காவின் நியூயோர்க் மாநில செனட் சபைக்குத் தெரிவான முதல் பலஸ்தீனப் பெண் மற்றும் முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அபர் கவாஸ் படைத்துள்ளார்.
34 வயதான ஜனநாயக சோசலிசக் கட்சியைச் சேர்ந்த அபர் கவாஸ், நியூயோர்க்கின் 12ஆவது தேர்தல் மாவட்டத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஹான் கான் டோவை எதிர்த்துப் போட்டியிட்டு 74.5 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், நியூயோர்க் செனட் வரலாற்றில் முதல் பலஸ்தீனப் பிரதிநிதியை மக்கள் தெரிவு செய்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
நியூயோர்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி மற்றும் ஜனநாயக சோசலிஸ்ட்கள் அமைப்பின் ஆதரவுடன் தேர்தலில் களமிறங்கிய அபர் கவாஸ், ஆரம்பத்தில் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்கு தயக்கம் காட்டியிருந்தார்.
பலஸ்தீன விடுதலைக்கான தனது உறுதியான நிலைப்பாட்டில் சமரசம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற அச்சமே இதற்குக் காரணமாக இருந்ததாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. எனினும், மாறிவரும் அரசியல் சூழலும் பலஸ்தீன உரிமைகளுக்கான ஆதரவு அதிகரித்து வருவதும் தேர்தலில் போட்டியிட அவரைத் தூண்டியுள்ளன.
1948 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் பலஸ்தீனத்திலிருந்து இடம்பெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த அபர் கவாஸ், அமெரிக்காவில் குடியேற்றம் தொடர்பான பல்வேறு சவால்களை எதிர்கொண்ட குடும்பத்தில் வளர்ந்தவர்.
அவரது சிறுவயதில், தந்தை அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரால் (ICE) தடுத்து வைக்கப்பட்ட சம்பவம், சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான முக்கிய உந்துதலாக அமைந்துள்ளது.
1,000 இற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட அவரது தேர்தல் பிரசாரத்தில், குறைந்த செலவிலான வீடமைப்பு, சுகாதார சேவைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் பலஸ்தீன மக்களுக்கான ஆதரவு ஆகிய விடயங்கள் முக்கிய இடம்பிடித்திருந்தன.
இதற்கு முன்னர், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேலிய குடியேற்ற நடவடிக்கைகளுக்கு நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்புகள் ஆதரவளிப்பதைத் தடுக்கும் வகையிலான சட்டமூலத்தை உருவாக்குவதில், சோஹ்ரான் மம்தானியுடன் இணைந்து அபர் கவாஸ் பணியாற்றியிருந்தார்.
2023ஆம் ஆண்டு மம்தானியுடன் இணைந்து வரைந்த 'Not on Our Dime!' என்ற சட்டமூலத்தை மீண்டும் முன்னெடுப்பது, மாநில செனட்டராகத் தனது ஆரம்பகட்ட முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மாநில சட்டமன்றத்தில் சிறுபான்மை அரசியல் இயக்கத்தின் பிரதிநிதியாகச் சட்டங்களை நிறைவேற்றுவதில் சவால்கள் காணப்படுவதை ஏற்றுக்கொண்டுள்ள அவர், அடிமட்ட மக்கள் அமைப்புகளின் செயற்பாடுகள் மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் பலஸ்தீன உரிமைகளுக்கு ஆதரவான மற்றும் ஜனநாயக சோசலிசக் கொள்கைகளைக் கொண்ட வேட்பாளர்கள் அண்மைக்காலத் தேர்தல்களில் வெற்றிபெற்று வரும் நிலையில், அபர் கவாஸின் வெற்றியும் சமூக நீதி மற்றும் பலஸ்தீன ஆதரவு அரசியலுக்குக் கிடைத்துள்ள முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.