பாதுகாப்பு அச்சுறுத்தல்: சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளை நவம்பர் 30 வரை இடைநிறுத்தியுள்ள முன்னணி விமான நிறுவனங்கள்

arvloshan.com

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பிராந்திய இராணுவப் பதற்றம் காரணமாக, சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளைப் பல முன்னணி சர்வதேச விமான நிறுவனங்கள் நவம்பர் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தியுள்ளன.

இண்டிகோ (IndiGo), ஏர் இந்தியா (Air India), ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏர் (Akasa Air), எதிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) மற்றும் ஃப்ளைதுபாய் (flydubai) உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தமது விமான சேவை ரத்துச் செய்யப்பட்ட காலப்பகுதியை நீடித்துள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, ஜெட்டா, மதீனா, ரியாத் மற்றும் தம்மாம் ஆகிய நகரங்களுக்கான தனது அனைத்து விமான சேவைகளும் 2026 நவம்பர் 30ஆம் திகதி வரை ரத்துச் செய்யப்படுவதாக புதன்கிழமை (18) அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு தேவையான உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்கள் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான விமான சேவைகளை நவம்பர் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தியுள்ளன. அதேவேளை, ஜெட்டாவுக்கான விமான சேவைகள் நவம்பர் 21ஆம் திகதி வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

மற்றுமொரு இந்திய விமான நிறுவனமான ஆகாசா ஏர், ரியாத் மற்றும் ஜெட்டாவுக்கான விமான சேவைகளை நவம்பர் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தியுள்ளது.

அபுதாபியைத் தளமாகக் கொண்ட எதிஹாட் ஏர்வேஸ், ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான விமான சேவைகளை நவம்பர் 30ஆம் திகதி வரை ரத்துச் செய்துள்ளது. எனினும், சவுதி அரேபியாவின் ஏனைய நகரங்களுக்கான அதன் விமான சேவைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, துபாயைத் தளமாகக் கொண்ட ஃப்ளைதுபாய் நிறுவனம், ரியாத் மற்றும் அப்ஹா உள்ளிட்ட சில சவுதி நகரங்களுக்கான விமான சேவைகளை நவம்பர் 27ஆம் திகதி வரை இடைநிறுத்தியுள்ளது.

எனினும், சவுதி அரேபியாவுக்கான அனைத்து சர்வதேச விமான சேவைகளும் முழுமையாக நிறுத்தப்படவில்லை.

கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் நவம்பர் 13ஆம் திகதி முதல் ரியாத்துக்கும், நவம்பர் 14ஆம் திகதி முதல் தம்மாமுக்கும் தினசரி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

அதேபோன்று, எமிரேட்ஸ் மற்றும் ஏர் அரேபியா ஆகிய நிறுவனங்களும் இடையூறுகளுக்கு மத்தியிலும் சவுதி அரேபியாவின் தெரிவுசெய்யப்பட்ட நகரங்களுக்கான விமான சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.

சவுதியின் தேசிய விமான நிறுவனங்களான சவுதியா மற்றும் ஃப்ளைடீல் ஆகியவையும் மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளைத் தொடர்ந்து நடத்துகின்றன. சில ரியாத் பயணிகள் காசிம் விமான நிலையம் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து பேருந்துகள் மூலம் ரியாத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

சவுதி அரேபியாவுக்கும் ஈரானின் ஆதரவைப் பெறும் யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் மீண்டும் அதிகரித்துள்ள இராணுவப் பதற்றமே இந்த விமானப் போக்குவரத்து பாதிப்புகளுக்குக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

சவுதி அரேபியாவின் நிலப்பரப்பு மற்றும் உட்கட்டமைப்பு இலக்குகளை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், புதன்கிழமை சவுதியின் பல தென்பகுதி நகரங்களில் அந்நாட்டு அதிகாரிகள் பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்திருந்தனர். எனினும், பின்னர் உடனடி ஆபத்து நீங்கியுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த விமான சேவை பாதிப்புகளால் தொழில், வர்த்தகம் மற்றும் மத வழிபாட்டுப் பயணங்களுக்காக சர்வதேச அளவில் பயணம் மேற்கொள்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக உம்ரா யாத்திரைக்காக சவுதி அரேபியா செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகளும் இந்த நிலைமையால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பயணிகள் விமான நிலையங்களுக்குச் செல்வதற்கு முன்னர் தங்களது விமானப் பயண நிலவரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமையைப் பொறுத்து விமானப் பயண அட்டவணைகளில் மேலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

அயர்லாந்து விமான நிலையத்தில் 60 மில்லியன் டொலர் அமெரிக்க இராணுவ விமானத்தை சேதப்படுத்திய நபர்

...

arvoshan.com

அமெரிக்காவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான ஹோண்டா வாகனங்கள் தொடர்பில் விசாரணை!

...

arvoshan.com

ஜெப்ரி எப்ஸ்டீன் தற்கொலை செய்யவில்லை; கொலை செய்யப்பட்டிருக்கலாம் – தடயவியல் நிபுணர்கள் புதிய தகவல்

...

arvoshan.com

ஆசியப் பயணத்தை ஆரம்பித்தார் டொனால்ட் ட்ரம்ப் – பிலிப்பைன்ஸில் பொருளாதார ஒப்பந்தங்கள், நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை

...

arvoshan.com

அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் திடீர் சேவைத் தடை – ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிப்பு!

...

arvoshan.com

திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு முன்னுரிமை – கனடா அறிவிப்பு!

...

arvoshan.com

தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயிரிழப்பு!

...

arvoshan.com

மத்திய கிழக்கிற்கு வந்தடைந்தது அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல்

...

arvoshan.com

இரண்டு நாட்களில் 2,200க்கும் மேற்பட்ட குடியேறிகள் கேனரி தீவுகளை வந்தடைந்தனர்!

...

arvoshan.com

நைஜீரியாவில் 33.95 கிலோ கஞ்சாவுடன் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கைது!

...

arvoshan.com

சீனப் போட்டியால் நெருக்கடியில் ஜாகுவார்; 4,000 வேலைவாய்ப்புகள் குறைப்பு!

...

arvoshan.com

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி – விநியோகம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு!

...

arvoshan.com

டிக்டொக் காணொளி படப்பிடிப்பின்போது வனவிலங்கு தாக்கி 19 வயது இளைஞர் உயிரிழப்பு – பாகிஸ்தானில் இருவர் கைது

...

arvoshan.com

அமெரிக்காவில் ஆற்றில் கவிழ்ந்த பயணிகள் படகு – 30க்கும் மேற்பட்டோர் காயம்!

...

arvoshan.com

அமெரிக்க வான்பரப்பில் நான்கு மணி நேரப் பெரும் குழப்பம் – என்ன நடந்தது?

...