ஜெப்ரி எப்ஸ்டீன் தற்கொலை செய்யவில்லை; கொலை செய்யப்பட்டிருக்கலாம் – தடயவியல் நிபுணர்கள் புதிய தகவல்

arvloshan.com

அமெரிக்காவில் சிறையில் உயிரிழந்த பாலியல் குற்றவாளியும் நிதி வர்த்தகருமான ஜெப்ரி எப்ஸ்டீன் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தடயவியல் நிபுணர்கள் புதிய ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர்.

எனினும், எப்ஸ்டீன் தற்கொலை செய்துகொண்டதாக முன்னர் வழங்கிய தீர்மானத்தில் மாற்றமில்லை என நியூயோர்க் நகர தலைமை மருத்துவ பரிசோதகர் அலுவலகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

தடயவியல் மருத்துவம் மற்றும் தொற்றுநோயியல் துறையைச் சேர்ந்த மைக்கேல் ஃப்ரீமேன் தலைமையிலான நிபுணர் குழுவினர், திங்கட்கிழமை லண்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தமது ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர்.

ஸ்வீடனின் உமேயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தடயவியல் நோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் எரிக்சன் மற்றும் அறிவாற்றல் நரம்பியல் ஆய்வாளர் இடியல் ட்ரோர் ஆகியோரும் இந்த ஆய்வில் இணைந்திருந்தனர்.

எப்ஸ்டீனின் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் புகைப்படங்களை ஆய்வு செய்து, அவரது உடலில் காணப்பட்ட காயங்களை மீளாய்வு செய்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களது ஆய்வின்படி, எப்ஸ்டீனின் உடலில் காணப்பட்ட காயங்கள் தாக்குதல் மற்றும் போராட்டத்துடன் தொடர்புடையவையாக இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கழுத்தில் காணப்பட்ட கட்டுப்பட்ட தடயங்கள், பின்னால் இருந்து துணியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதற்கான சாத்தியக்கூறுகளுடன் அதிகம் பொருந்துவதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் தமது ஆய்வில் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், நியூயோர்க் நகர தலைமை மருத்துவ பரிசோதகர் அலுவலகம் CNN ஊடகத்துக்கு வழங்கிய அறிக்கையில், எப்ஸ்டீனின் மரணம் தற்கொலை என்பதிலும், அது தூக்கிட்டதன் காரணமாக இடம்பெற்றது என்பதிலும் தமது அலுவலகம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

2019 ஆகஸ்ட் 10ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் தடுப்பு மத்திய சிறைச்சாலையின் அறையொன்றில் எப்ஸ்டீன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மரணமடைவதற்கு முன்னர் அவர் தற்கொலைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த போதிலும், ஜூலை 24ஆம் திகதி அந்தக் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

எப்ஸ்டீனின் மரணம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை முடிவுகள் வெளியான பின்னர், அவரது சட்டத்தரணிகள் அந்த முடிவுகளில் திருப்தியடையவில்லை எனத் தெரிவித்ததுடன், சிறைச்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவான FBI மற்றும் நீதித்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியன அவரது மரணம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தன.

இதற்கிடையில், எப்ஸ்டீன் தங்கியிருந்த சிறைப் பிரிவுக்கு அருகிலிருந்த பாதுகாப்புக் கமராக்கள் சம்பவம் இடம்பெற்ற இரவில் உரிய முறையில் பதிவுகளை மேற்கொள்ளவில்லை என்பதும் தெரியவந்தது. சிறைச்சாலையின் கண்காணிப்புக் கமராக்களில் நீண்டகாலமாக நிலவிய தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என 2023ஆம் ஆண்டு அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்துக்கு மறுநாள், 2019 ஜூலை 24ஆம் திகதி, தான் தற்கொலை செய்துகொள்ள விரும்பவில்லை என எப்ஸ்டீன் தெரிவித்திருந்ததாக உளவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு சிறுமிகளை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்ததுடன், பாலியல் கடத்தல் வலையமைப்பொன்றை நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டிருந்தார்.

2002 முதல் 2005ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், 14 வயதுடைய சிறுமிகள் உள்ளிட்ட பலருக்கு பணம் வழங்கி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் பல வெளியிடப்பட்டுள்ள போதிலும், அவர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கும் இதுவரை முழுமையான தெளிவு கிடைக்கவில்லை. குறிப்பாக, செல்வாக்கு மிக்க நபர்களை மிரட்டுவதற்காக அவர் பராமரித்ததாகக் கூறப்படும் வாடிக்கையாளர் பட்டியல் தொடர்பான தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், புதிய ஆய்வை முன்னெடுத்த மைக்கேல் ஃப்ரீமேன், எப்ஸ்டீனைக் கொலை செய்திருக்கக்கூடிய நபர் யார் என்பது குறித்து தமக்குத் தெரியாது என்றும், தனது கவனம் மரணம் தொடர்பான விசாரணையிலும் பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் காணப்பட்ட குறைபாடுகளை அடையாளம் காண்பதிலேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எப்ஸ்டீனின் சகோதரர் மார்க் எப்ஸ்டீன் மூலம் பிரேதப் பரிசோதனை ஆவணங்கள் தமக்குக் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்தப் புதிய ஆய்வு முடிவுகள் இதுவரை சுயாதீன நிபுணர்களின் சக மதிப்பாய்வுக்கு (Peer Review) உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

ஆசியப் பயணத்தை ஆரம்பித்தார் டொனால்ட் ட்ரம்ப் – பிலிப்பைன்ஸில் பொருளாதார ஒப்பந்தங்கள், நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை

...

arvoshan.com

அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் திடீர் சேவைத் தடை – ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிப்பு!

...

arvoshan.com

திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு முன்னுரிமை – கனடா அறிவிப்பு!

...

arvoshan.com

தென்னாப்பிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 17 பேர் உயிரிழப்பு!

...

arvoshan.com

மத்திய கிழக்கிற்கு வந்தடைந்தது அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல்

...

arvoshan.com

இரண்டு நாட்களில் 2,200க்கும் மேற்பட்ட குடியேறிகள் கேனரி தீவுகளை வந்தடைந்தனர்!

...

arvoshan.com

நைஜீரியாவில் 33.95 கிலோ கஞ்சாவுடன் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கைது!

...

arvoshan.com

சீனப் போட்டியால் நெருக்கடியில் ஜாகுவார்; 4,000 வேலைவாய்ப்புகள் குறைப்பு!

...

arvoshan.com

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி – விநியோகம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு!

...

arvoshan.com

டிக்டொக் காணொளி படப்பிடிப்பின்போது வனவிலங்கு தாக்கி 19 வயது இளைஞர் உயிரிழப்பு – பாகிஸ்தானில் இருவர் கைது

...

arvoshan.com

அமெரிக்காவில் ஆற்றில் கவிழ்ந்த பயணிகள் படகு – 30க்கும் மேற்பட்டோர் காயம்!

...

arvoshan.com

அமெரிக்க வான்பரப்பில் நான்கு மணி நேரப் பெரும் குழப்பம் – என்ன நடந்தது?

...

arvoshan.com

ரஷ்யாவில் தொடர் குண்டுவெடிப்புகள்: இராணுவ அதிகாரி பலி; உக்ரைன் முன்னாள் பிரதமரின் ஆலோசகர் படுகாயம்

...

arvoshan.com

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி வெவ்வேறு விலைகளை நிர்ணயிக்கும் நடைமுறைக்குத் தடை – நியூயோர்க்

...

arvoshan.com

டைட்டானிக்கை விட நீளமான கப்பல் கடலில் மூழ்கடிப்பு! உலகின் மிகப்பெரிய செயற்கைப் பவளப்பாறையாக மாற்றம்

...