அமெரிக்காவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான ஹோண்டா வாகனங்கள் தொடர்பில் விசாரணை!
அமெரிக்காவில் 10 இலட்சத்திற்கும் அதிகமான ஹோண்டா (Honda) வாகனங்கள் தொடர்பில் அந்நாட்டு வாகனப் பாதுகாப்பு அதிகாரிகள் புதிய விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
வாகனங்கள் தானாகவே இயந்திரத்தை நிறுத்தி மீண்டும் இயக்கும் (Automatic Stop-Start) தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் கோளாறுகள் தொடர்பில் கிடைத்த நூற்றுக்கணக்கான முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA), 2024 முதல் 2026 வரையான தயாரிப்பு ஆண்டுகளைக் கொண்ட Honda Odyssey, Passport, Ridgeline, Pilot மற்றும் Acura MDX ஆகிய வாகனங்கள் தொடர்பில் சுமார் 700 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், வாகனம் முழுமையாக நிறுத்தப்படும்போது இயந்திரத்தைத் தானாகவே அணைத்துவிடும். சாரதி பிரேக் மிதியிலிருந்து காலை அகற்றியதும் இயந்திரம் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்.
எனினும், சில சந்தர்ப்பங்களில் இயந்திரம் மீண்டும் இயக்கப்படுவதில்லை என சாரதிகள் முறைப்பாடு செய்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் வாகனங்கள் இயங்க முடியாமல் நிற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் 2022ஆம் ஆண்டு சுமார் 22 இலட்சம் ஹோண்டா வாகனங்கள் தொடர்பில் இதேபோன்ற விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு கிடைத்த 1,300க்கும் அதிகமான முறைப்பாடுகளைத் தொடர்ந்து அந்த விசாரணை விரிவுபடுத்தப்பட்டது. இதன்போது நான்கு விபத்துகள் மற்றும் இருவர் காயமடைந்தமை தொடர்பான முறைப்பாடுகளும் பதிவாகியிருந்தன.
தற்போதைய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வாகனங்களில் ஒரே மாதிரியான அறிகுறிகள் காணப்பட்டாலும், அவற்றின் பின்னணியில் வெவ்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் இருக்கலாம் என NHTSA சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சில வாகனங்களுக்கான மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் ஸ்டார்டர் உதிரிப்பாகங்களை மாற்றுதல் உள்ளிட்ட திருத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஹோண்டா நிறுவனம் 2023ஆம் ஆண்டிலேயே சேவை அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது.
மேலும், குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கான உத்தரவாதக் காலத்தையும் வரையறையற்ற மைலேஜுடன் 10 ஆண்டுகளாக நிறுவனம் நீடித்திருந்தது.
புதிய விசாரணை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஹோண்டா நிறுவனம், விசாரணை குறித்து அறிந்துள்ளதாகவும், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்சார பவர் ஸ்டியரிங் உதவி இழக்கப்படக்கூடிய மென்பொருள் கோளாறு காரணமாக, அமெரிக்காவில் 6 இலட்சத்து 35 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை ஹோண்டா நிறுவனம் அண்மையில் மீளப்பெறுவதாக அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை என்பது உத்தியோகபூர்வ வாகன மீளப்பெறல் அறிவிப்பு அல்ல எனவும், மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமா என்பது குறித்து அதிகாரிகள் இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.