ஐ.நா. வாக்கெடுப்பில் அமெரிக்கா நடுநிலை; இலங்கை ஆதரவு
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில், அமெரிக்கா உள்ளிட்ட ஆறு நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியுள்ளன.
இந்தத் தீர்மானத்திற்கு இலங்கை உள்ளிட்ட 175 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. சோமாலியா மாத்திரம் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது.
அமெரிக்காவுடன் ரஷ்யா, பெலாரஸ், ஆர்ஜென்டினா, கமரூன் மற்றும் புர்கினா பாசோ ஆகிய நாடுகளும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியுள்ளன.
கருக்கலைப்பு மற்றும் இனப்பெருக்கச் சுகாதார உரிமைகள் தொடர்பான வாசகங்கள் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளமை குறித்து அமெரிக்கா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறான விடயங்கள் தொடர்பான தீர்மானங்களை அந்தந்த நாடுகளே சுயமாக மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே வாக்கெடுப்பில் இருந்து விலகியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.