ஹூதி ஏவுகணைத் தாக்குதல்: சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உயரமான கட்டடம் சேதம்
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் அமைந்துள்ள, அந்நாட்டின் இறையாண்மைச் செல்வ நிதியத்தின் (Sovereign Wealth Fund) தலைமையகத்தைக் கொண்ட உயரமான கட்டடம் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (நவம்பர் 19) யேமனின் ஹூதி கிளர்ச்சிப் படையினர் நடத்தியதாகக் கூறப்படும் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தச் சேதம் ஏற்பட்டுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படும் நேரத்தில் ரியாத் நகரில் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தம் கேட்டதாக சர்வதேச செய்தி நிறுவனமான AFP இன் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களுக்கு குறுகிய நேரத்திற்கு அபாய எச்சரிக்கை விடுத்ததுடன், சில நிமிடங்களுக்குப் பின்னர் அச்சுறுத்தல் நீங்கிவிட்டதாக அறிவித்துள்ளனர்.
ரியாத் நகரை நோக்கி ஹூதி கிளர்ச்சிப் படையினரால் ஏவப்பட்ட ஏவுகணை அச்சுறுத்தலைத் தமது படையினர் இடைமறித்துள்ளதாக சவுதி தலைமையிலான இராணுவக் கூட்டணி உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கூட்டணியின் பேச்சாளர் துர்கி அல் மாலிகி, ஏவுகணை இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் சிதைவுகள் விழுந்ததால் கட்டடங்களுக்கு பொருள் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சேத விபரங்கள் தொடர்பில் தற்போது மதிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யேமனில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்துக்கு சவுதி அரேபியா ஆதரவளித்து வருகின்றது. மறுபுறம், ஹூதி கிளர்ச்சிப் படையினர் அதற்கு எதிராகப் போரிட்டு வருகின்றனர்.
கடந்த கோடைக்காலத்தில் யேமனில் மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய தாக்குதல்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.