ஐ.நா. சீர்திருத்தம், எரிபொருள் விநியோகம், அணுவாயுதக் கட்டுப்பாடு: ட்ரம்ப், ஸீ ஜின்பிங், புதின் பேச்சுவார்த்தை
சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்புச் சந்திப்பில், ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, எரிபொருள் விநியோகத்தை அதிகரிப்பது மற்றும் அணுவாயுதங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அணுவாயுதங்களைக் கொண்ட மூன்று வல்லரசுகளின் தலைவர்களும் ஒரே மேசையில் சந்தித்த இந்தப் பேச்சுவார்த்தை, உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்பட்டது.
இந்தச் சந்திப்புக்கு முன்னதாக, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து அணுவாயுதங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பது, உக்ரைன் மற்றும் ஈரான் போர்களுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், ஷென்சென் நகரிலுள்ள விருந்தினர் மாளிகையில் சுமார் 70 நிமிடங்கள் நடைபெற்ற மூடிய அறைப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஐ.நா. சபையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, படிம எரிபொருள் சுத்திகரிப்பை மேம்படுத்துவது மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக வர்ணித்த ட்ரம்ப், “நாம் உண்மையிலேயே வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறோம். பூமியில் அணுவாயுதங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மற்றும் அவை பயன்படுத்தப்படும் அபாயத்தைக் தணிப்பது குறித்து கலந்துரையாடுவதற்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தனித்துவமான நிலையில் உள்ளன” எனத் தெரிவித்தார்.
உலக அமைதியை மேம்படுத்துவதே இந்தச் சந்திப்பின் நோக்கம் என சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் குறிப்பிட்டதுடன், சர்வதேச அமைதியைப் பேணுவதில் மூன்று நாடுகளுக்கும் கூட்டுப் பொறுப்பு இருப்பதாக புதினும் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஸீ ஜின்பிங், சந்திப்பு ஆக்கபூர்வமானதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்ததாகக் குறிப்பிட்டார். அதேவேளை, பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெற்றதாக புதின் தெரிவித்தார்.
அணுவாயுதக் கட்டுப்பாடு தொடர்பில் சவால்கள்
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான கடைசி அணுவாயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான 'New START' கடந்த பெப்ரவரி மாதம் காலாவதியானது.
இதற்குப் பதிலாக, சீனாவையும் உள்ளடக்கிய புதிய மற்றும் நவீனமயப்படுத்தப்பட்ட அணுவாயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமொன்றை உருவாக்க விரும்புவதாக ட்ரம்ப் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
எனினும், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் தலா 5,000-க்கும் அதிகமான அணுவாயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்படும் நிலையில், சீனாவிடம் 600-க்கும் அதிகமான அணுவாயுதங்களே உள்ளதாகக் கணிக்கப்படுகிறது.
இதனால், தனது அணுவாயுத இருப்பைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இணைவதற்கு சீனாவுக்கு அதிக ஆர்வம் இருக்காது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அணுவாயுதக் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டேரில் கிம்பால் கருத்துத் தெரிவிக்கையில், இந்தச் சந்திப்பு அணுவாயுதங்களைக் குறைப்பது தொடர்பான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கான ஆரம்பமாக அமையலாம் எனக் குறிப்பிட்டார்.
மேலும், மூன்று தலைவர்களுக்கும் இடையிலான புகைப்பட அமர்வுகளும் இராஜதந்திர நாடகங்களும் மாத்திரம் போதாது எனவும், ஒரேயொரு சந்திப்பின் மூலம் பாரிய முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் வர்த்தகம் குறித்தும் பேச்சு
முத்தரப்புச் சந்திப்புக்கு முன்னதாக, ட்ரம்ப் மற்றும் ஸீ ஜின்பிங் இடையே தனியான இருதரப்புச் சந்திப்பும் நடைபெற்றது. இந்த ஆண்டில் இரு தலைவர்களும் முக்கியத்துவம் வாய்ந்த வகையில் சந்திப்பது இது மூன்றாவது முறையாகும்.
மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய கடல்வழியான ஹோர்முஸ் நீரிணை ஊடான எண்ணெய் போக்குவரத்து தொடர்ந்து இடம்பெறுவது இரு நாடுகளுக்கும் பொதுவான நலனாக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
ஈரான் போர் காரணமாகத் தாக்குதல்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை பல தடவைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், அமெரிக்காவிலிருந்து அதிகளவிலான விவசாயப் பொருட்களை சீனா கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் ட்ரம்ப் வலியுறுத்தத் திட்டமிட்டிருந்தார்.
ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அமெரிக்கா - சீனா உறவுகள் பொதுவாக நிலையானதாகவும் மேம்பட்டதாகவும் இருப்பதாக ஸீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பான விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தியதாக சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீது விமர்சனம்
முத்தரப்புச் சந்திப்பின் பின்னர், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு தொடர்பிலும் மூன்று நாடுகளின் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
அரசாங்க அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்வதற்கு அந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கக்கூடாது என்றும், அரச அதிகாரிகளுக்கு வழக்குத் தொடர்விலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தொடர்பான விசாரணைகளைக் காரணம் காட்டி, குறித்த நீதிமன்றத்துக்கும் அதன் அதிகாரிகளுக்கும் எதிராக ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் - புதின் உறவை விட ஸீ - புதின் நெருக்கம் அதிகம்
இந்தச் சந்திப்பில் ட்ரம்ப் தனது தனிப்பட்ட உறவுகளை இராஜதந்திர வெற்றிக்கான முக்கிய அம்சமாக முன்னிறுத்தியிருந்தாலும், சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு அதைவிட வலுவானதாகக் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நிலையில், சீனா ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவளித்து வருகின்றது.
இதற்கிடையில், உக்ரைன் போர் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள மாற்றங்களும் கவனத்தை ஈர்த்துள்ளன.
கடந்த ஆண்டு அலாஸ்காவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ட்ரம்பும் புதினும் மீண்டும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க - சீன உறவில் சில உரசல்களும் வெளிப்பட்டுள்ளன. ட்ரம்ப் - ஸீ ஜின்பிங் சந்திப்பின்போது கேள்வியெழுப்பிய ப்ளூம்பெர்க் செய்தியாளர், முத்தரப்புச் சந்திப்பில் பங்கேற்க சீன அதிகாரிகளால் அனுமதிக்கப்படவில்லை.
மேலும், ட்ரம்ப் சோர்வாகத் தோன்றும் காணொளியொன்றை சீனத் தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்த நிலையில், ஸீ ஜின்பிங் நகரும் படிக்கட்டில் ஏறுவதற்கு ட்ரம்ப் உதவிய காணொளியை வெள்ளை மாளிகை வெளியிட்டிருந்தது.
இவ்வாறான சூழலில், மூன்று வல்லரசுகளின் தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றியிருந்தாலும், அணுவாயுதக் கட்டுப்பாடு மற்றும் சர்வதேச மோதல்களுக்கான தீர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் உறுதியான முன்னேற்றம் ஏற்படுமா என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது.