நாட்டின் பல மாகாணங்களில் பலத்த மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இலங்கையின் பல மாகாணங்களில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள இக் காற்றழுத்த தொகுதி, மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, இந்தியாவின் வடக்கு ஆந்திர பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை இன்று இரவு கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ் அமைப்பு இலங்கைக்கு நேரடியாக எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்ற போதிலும், அதனை நோக்கி ஈர்க்கப்படும் காற்று வீச்சு காரணமாக தீவின் தென்மேற்குப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். அத்துடன், சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே, இடிமின்னல் மற்றும் தற்காலிகமாக வீசும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.