அக்டோபர் 1 முதல் இலங்கையில் முதன்முறையாக காகிதமற்ற சுங்கப் பிரகடன முறைமை அறிமுகம்
இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளைப் பூரண இலக்கமுறைக்கு மாற்றுவதற்கும், வர்த்தகத் துறையினருக்கான சேவைகளை விரைவுபடுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முக்கிய கட்டமாக, இலங்கையின் முதலாவது காகிதமற்ற சுங்கப் பிரகடன முறைமை எதிர்வரும் அக்டோபர் மாதம் 01 ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
புதிய முறைமையின் கீழ், சுங்கப் பிரகடனங்கள் மற்றும் அதற்குரிய அத்தியாவசிய ஆவணங்கள் அனைத்தும் மின்னணு வடிவில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலிக்கப்படும். இதன் மூலம் காகித ஆவணங்களின் பயன்பாடும், கைமுறையாக மேற்கொள்ளப்படும் தாமதங்களும் பெருமளவில் குறைக்கப்படும்.
இப்புதிய நடைமுறையானது சுங்கப் பரிசோதனைகளை விரைவுபடுத்துவதுடன், செயற்பாடுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஆவணங்களைக் கண்காணிக்கும் வசதியை அதிகரிக்கும் என இலங்கைச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், இடர்சார் சுங்கக் கட்டுப்பாடுகள் , அரச வருமானப் பாதுகாப்பு, சட்ட இணக்கப்பாடு மற்றும் வர்த்தக வசதிப்படுத்தல் என்பன இதன் மூலம் வலுவடையும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, சுங்கத் திணைக்களத்தின் 'நீண்ட அறையில்' (Long Room) இடம்பெறும் சுங்கப் பிரகடன நடைமுறைகள் அனைத்தும் அக்டோபர் 1 ஆம் திகதி முதல் காகிதமற்ற வடிவில் முன்னெடுக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இறக்குமதியாளர்கள் மற்றும் சுங்கப் பிரகடனப்படுத்துனர்கள் செல்லுபடியாகும் இலக்கமுறை கையொப்பங்களை பயன்படுத்தி மாத்திரமே சுங்கப் பிரகடனப் படிவங்கள் மற்றும் ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும். நேரில் கொண்டுவரப்படும் காகித ஆவணங்கள் எதுவும் இனி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 'அசிகுடா' (ASYCUDA) கணினித் தொகுதியுடன் இலக்கமுறை கையொப்பங்களை ஒருங்கிணைத்து, சட்டபூர்வமான மற்றும் பாதுகாப்பான முறையில் ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நிறைவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இப்புதிய திட்டம் அமலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.