அனோஜனின் உயிரைக் காப்பாற்ற மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி நஷீத் முழு ஆதரவு!
சமூக வலைத்தளப் பதிவு தொடர்பாக சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்க இளைஞரான அனோஜன் சிவராசாவின் உயிரைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் தனது முழுமையான ஆதரவை உறுதியளித்துள்ளார்.
அனோஜனின் சார்பாக முன்னெடுக்கப்படும் இராஜதந்திர தூதுப் பணியின் முதற்கட்டமாக, ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான பைஸர் முஸ்தபா மற்றும் உபுல் குமாரப்பெரும ஆகியோர் புதன்கிழமை மாலத்தீவில் முன்னாள் ஜனாதிபதி நஷீதைச் சந்தித்து கலந்துரையாடினர்.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக அனோஜன் வெளியிட்ட கருத்துக்களின் தீவிரத் தன்மையை சுட்டிக்காட்டிய போதிலும், மனிதநேய அடிப்படையில் அந்த இளைஞனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் தாம் ஆதரவளிப்பதாக நஷீத் இதன்போது தெரிவித்தார்.
அதேவேளை, அரசாங்கத்தின் விசேட இராஜதந்திரத் தூதுவர்களாக சட்டத்தரணிகள் பைஸர் முஸ்தபா மற்றும் உபுல் குமாரப்பெரும ஆகியோரை சவுதி அரேபியாவிற்கு அனுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், இந்த தீர்மானம் குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் தலையீட்டைத் தொடர்ந்து இந்த விசேட பயணத்தை மேற்கொள்ளும் இரு சட்டத்தரணிகளும், இதற்காக அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தாது தமது சொந்தச் செலவிலேயே சவுதி அரேபியாவிற்குப் பயணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி நஷீதுடனான சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாகத் தெரிவித்துள்ள சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, எதிர்வரும் நாட்களில் சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.