அனோஜன் மரண தண்டனை: இந்தியா, அமெரிக்காவிடம் தமிழரசுப் கட்சி அவசர கோரிக்கை!
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக தலையிடுமாறு கோரி, இலங்கைத் தமிழரசுப் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பிலுள்ள உயர்நிலை இந்திய மற்றும் அமெரிக்க இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தமிழரசுப் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் அந்தோணி வி. பிர்னோட் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியது. தமிழரசுப் கட்சியின் நாடாளுமன்றக் குழு எடுத்த தீர்மானத்திற்கு அமைவாகவே இச்சந்திப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
இச்சந்திப்புகளின் போது, அனோஜனின் குடும்பத்தினரின் சார்பில் அவரது வழக்கு தொடர்பான முழுமையான விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜதந்திரிகளிடம் சமர்ப்பித்தனர். மேலும், தூதரக வழிமுறைகளை ஆராய்ந்து, உரிய அதிகாரிகளுடன் பேசி அனோஜனின் விடுதலையை உறுதி செய்யுமாறு இரு நாடுகளிடமும் அவர்கள் வலியுறுத்தினர்.
அனோஜனின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் நிலவுவதால் நிலமையின் தீவிரத்தைக் கருத்திற் கொண்டு, இந்த மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்காக வெளிநாட்டு இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் சர்வதேச பங்காளிகளுடான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைத் தமிழரசுப் கட்சி தெரிவித்துள்ளது.