டிக் டாக் செயலிக்கு எதிராக நியூயோர்க்கில் வழக்கு: சிறுவர்களுக்கு ‘போலி’ பாதுகாப்பு அம்சங்கள் வழங்கி மோசடி
நியூயோர்க் மாநிலத்தினால் தொடரப்பட்டுள்ள வழக்கின் பகிரங்கப்படுத்தப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின் மூலம், டிக் டாக் (TikTok) செயலி தொடர்பாக மிகவும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்களது கணக்குகளில் பாதுகாப்பு அமைப்புகளை (Safety settings) செயற்படுத்த முயன்ற ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு, உண்மையில் இயங்காத 'போலி' (Placebo) பாதுகாப்பு வசதிகளை டிக் டாக் நிறுவனம் வழங்கியுள்ளதாக அந்த நீதிமன்ற ஆவணங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இத்தகைய "நிழல்" (Ghost) அல்லது போலிப் பரிசோதனைகளின் போது, சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் உட்பட ஆயிரக்கணக்கான பயனர்களை டிக் டாக் இலக்கு வைத்துள்ளதாகத் தெரியவருகிறது.
தேவையற்ற அல்லது ஆபத்தான உள்ளடக்கங்களை அகற்றுவதற்காக, தங்களது பரிந்துரைப்பட்டியலை (Recommendations) மீளமைக்கும் 'அல்கோ ரிஃப்ரெஷ்' (Algo Refresh) போன்ற பாதுகாப்பு அம்சங்களைச் செயற்படுத்திய பயனர்களே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர்.
பயனர்கள் அந்தப் பாதுகாப்பு வசதி இயங்குவதாக நம்பியபோதிலும், முழுமையாக இயங்கும் வசதியைப் பெற்ற மற்றைய பயனர்களைப் போலன்றி, இவர்களது கணக்குகளில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியூயோர்க் மாநில தலைமைச் சட்டத்தரணி (Attorney General) லெட்டிஷியா ஜேம்ஸ் (Letitia James) தலைமையிலான சட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த புதிய குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன.
சிறுவர்களை இந்தச் செயலிக்கு அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதாகவும் கூறி டிக் டாக் நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள 20-க்கும் மேற்பட்ட மாநில வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.
டிக் டாக் நிறுவனம் தனது செயல்பாட்டு விவரங்களைப் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்க முயன்றதைத் தொடர்ந்து, இந்த மாநில வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்ட பல ஆவணங்கள் இரகசியமாக வைக்கப்பட்டதுடன், முக்கிய பகுதிகள் மறைக்கப்பட்டும் இருந்தன.
ஆபத்தான உள்ளடக்கங்களைத் தவிர்க்கப் பயனர்கள் வெளிப்படையாக முயன்ற போதிலும், டிக் டாக் நிறுவனம் சில குழுக்களுக்குப் பாதுகாப்பு வசதிகளை அணுக முடியாமல் திட்டமிட்டுத் தடுத்துள்ளது. அதேவேளை, பாதுகாப்புக்கே தங்களின் முதன்மை முன்னுரிமை என்றும், இந்தச் செயலி இளைஞர்களுக்குப் பாதுகாப்பானது என்றும் டிக் டாக் பகிரங்கமாகக் கூறி வருவதாக சட்ட ஆவணங்கள் வாதிடுகின்றன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிக் டாக் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர், "நாங்கள் எங்களது தளத்தில் தொடர்ச்சியாக மேம்பாடுகளைச் செய்து வருகிறோம். பெரும்பாலான நிறுவனங்களைப் போல, புதிய தயாரிப்புகளும் அம்சங்களும் நிஜ உலகில் எவ்வாறு இயங்குகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்காகவே நாங்கள் அவற்றைத் தவறாமல் பரிசோதித்துப் பார்க்கிறோம்," எனக் கூறியுள்ளார்.
இருப்பினும், நியூயோர்க் மாநிலம் சுமத்தியுள்ள இக்குற்றச்சாட்டுகளை டிக் டாக் நிறுவனம் நீதிமன்றத் தாக்கல்களில் பெருமளவில் நிராகரித்துள்ளதுடன், இளைய பயனர்களைப் பாதுகாப்பதே தங்களின் முக்கிய இலக்கு என்றும் வாதிட்டு வருகிறது.