தென்கொரியாவில் AI மூலம் பரீட்சை மோசடி – கல்வி அமைச்சர் பதவி விலகல்!

arvloshan.com

தென்கொரியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரீட்சையில் மோசடி செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டின் கல்வி அமைச்சர் பதவி விலகியுள்ளார்.

முக்கியமான பல்கலைக்கழக அனுமதிப் பரீட்சைக்கு சில நாட்களுக்கு முன்னர் வெளிச்சத்துக்கு வந்த இந்த மோசடிச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய வரிக் கணக்கியல் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற ஒருவர், சிறிய ரக மறைக்கப்பட்ட கமரா மற்றும் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி வினாக்களைப் பெற்று, AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் பதில்களைத் தயாரித்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

குறித்த பரீட்சையில் தாம் பெற்ற உயர்ந்த தரவரிசை முறையான முயற்சியினால் கிடைத்ததல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞரின் YouTube கணக்கில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றிலேயே அவர் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 'சுனியுங்' (Suneung) எனப்படும் தென்கொரியாவின் முக்கிய பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சையில் மோசடிகளைத் தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதன்படி, பரீட்சை நிலையங்களில் பொது Wi-Fi வசதிகள் முடக்கப்பட்டதுடன், கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கப்பட்டது. மேலும், அனுமதியின்றி ஸ்மார்ட்போன்களைக் கொண்டுவருவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அவசர எச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

மாணவர்கள் பென்சில்களை மாத்திரம் கொண்டுவருமாறும், அழிப்பான்கள் பரீட்சை நிலையங்களிலேயே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மறைத்து வைக்கக்கூடிய டிஜிட்டல் சாதனங்களைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.

அத்துடன், பொத்தான்கள் கொண்ட ஆடைகளை அணிவதைத் தவிர்க்குமாறும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அவ்வாறான ஆடைகளை அணிந்து வந்தவர்களின் பொத்தான்கள் மீது மறைக்கப்பட்ட கமராக்கள் பொருத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் ஒட்டுப்பட்டிகள் ஒட்டப்பட்டன.

பரீட்சை மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு குறைந்தது 75,000 அமெரிக்க டொலர்கள் வரை வெகுமதி வழங்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்தது. மோசடியில் தொடர்புடைய ஏனையவர்களைக் காட்டிக்கொடுப்போருக்கு தண்டனைக் குறைப்பும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தாமதமானவை என ஆசிரியர் சங்கங்கள் விமர்சித்ததுடன், பொதுமக்களின் அதிருப்தியைத் தணிப்பதிலும் கல்வி அமைச்சர் சோய் கியோ-ஜின் (Choi Kyo-jin) தோல்வியடைந்தார்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற விசாரணையின்போது, பரீட்சை தினத்தில் மோசடியில் ஈடுபடுவோரை அதிகாரிகளால் கண்டறிய முடியுமா எனக் கேட்கப்பட்டதற்கு, தனது வயது காரணமாக அதில் தனக்கு நம்பிக்கை இல்லை என 72 வயதான அமைச்சர் பதிலளித்திருந்தார். அவரது இந்தக் கருத்து பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பரீட்சை எவ்வித பாரிய சம்பவங்களுமின்றி நிறைவடைந்த போதிலும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டு அமைச்சர் தனது பதவி விலகலை அறிவித்தார்.

அவரது பதவி விலகலை ஜனாதிபதி லீ ஜே மியுங் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வியாழக்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சையின்போது மின்னணு சாதனங்கள் தொடர்பான 111 முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றில் ஏறத்தாழ பாதி சம்பவங்கள் அவசர எச்சரிக்கை அறிவிப்புகள் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளன.

பரீட்சைக்கு முன்னதாக அனைத்து ஸ்மார்ட் சாதனங்களையும் அணைத்து அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், பரீட்சை நிலையங்களின் நடைபாதைகளில் வைக்கப்பட்டிருந்த பைகளும் பரிசோதிக்கப்பட்டன.

மாணவர்களின் கண்ணாடிகள், கைக்கடிகாரங்கள், ஆடைகளின் கழுத்துப் பகுதிகள் மற்றும் கைகளின் சட்டைப் பகுதிகளும் மறைக்கப்பட்ட கமராக்கள் உள்ளனவா எனச் சோதனையிடப்பட்டன.

தென்கொரியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த எட்டு மணிநேரப் பரீட்சை, மாணவர்கள் எந்தப் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற முடியும் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் அவர்களின் எதிர்காலத் தொழில் வாய்ப்புகள் மற்றும் சமூக அந்தஸ்தும் தீர்மானிக்கப்படுவதால், இந்தப் பரீட்சை அந்நாட்டில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் ஆங்கில செவிமடுத்தல் வினாத்தாளுக்கான 25 நிமிடங்களின்போது விமானங்களின் புறப்பாடுகளும் தரையிறக்கங்களும் மாற்றியமைக்கப்படுகின்றன. பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் இராணுவ டாங்கிகளின் நகர்வுகளும் இடைநிறுத்தப்படுகின்றன. பங்குச் சந்தை திறக்கும் நேரமும் ஒரு மணிநேரம் தாமதப்படுத்தப்படுவதுடன், பரீட்சை நிலையங்களிலிருந்து 200 மீற்றர் தொலைவிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இதேவேளை, மோசடியில் ஈடுபடும் மாணவர்கள் மீண்டும் 10 ஆண்டுகள் வரை இந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தடை விதிக்கப்படுவதுடன், அவர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

ஸ்மார்ட்போன்கள் தூக்கத்தைப் பாதிக்கின்றனவா? புதிய ஆய்வில் அதிர்ச்சியளிக்கும் தகவல்!

...

arvoshan.com

வழுக்கைத் தலைக்கும் தீர்வு கிடைக்குமா? சீன விஞ்ஞானிகளின் புதிய ‘மாயச் சீப்பு’ பரிசோதனையில் வெற்றி!

...

arvoshan.com

பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவை எட்டிய வாயேஜர் 1 – விண்வெளி ஆய்வில் வரலாற்றுச் சாதனை!

...

arvoshan.com

விநியோகச் சங்கிலி ஊடாக சைபர் தாக்குதல்; BBC உள்ளிட்ட 200 முக்கிய இணையத்தளங்கள் பாதிப்பு!

...

arvoshan.com

உள்நாட்டு மென்பொருள் புதுப்பிப்பால் Apple சேவைகளில் பாதிப்பு – சேவைகளை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை!

...

arvoshan.com

AI பயிற்சிக்காக தரவுகளைத் திரட்டும் தானியங்கி பொட்கள் – பல்கலைக்கழக நூலகங்களின் சேவைகள் பாதிப்பு

...

arvoshan.com

முதன்முறையாக விண்கலத்தை வெற்றிகரமாகப் பிடித்து சாதனை படைத்த SpaceX!

...

arvoshan.com

மைக்ரோசொப்ட் சேவைகளில் உலகளாவிய முடக்கம் – ஒரே தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்திருப்பதன் அபாயம் அம்பலம்

...

arvoshan.com

மைக்ரோசொஃப்ட் சேவைகளில் உலகளாவிய முடக்கம் – Outlook, Teams, Copilot பயன்பாடுகளை மீளமைப்பதில் சிக்கல்!

...

arvoshan.com

மைக்ரோசொஃப்ட் சேவைகளில் பரவலான முடக்கம் – Outlook, Teams உள்ளிட்ட சேவைகள் பாதிப்பு!

...

arvoshan.com

காதல் மோசடிக்காகத் திருடப்பட்ட புகைப்படம்; உண்மையான நபரைத் தேடி வந்த காதல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்!

...

arvoshan.com

குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகப் பதிவுகளை நீக்கும் வரை TikTok சேவையை நிறுத்த ஸ்பெயின் கோரிக்கை

...

arvoshan.com

குழந்தையின் வீடியோவை Snapchat-இல் வெளியிட்ட பெண்ணுக்கு சிறைத் தண்டனை – UAE-யிலிருந்து நாடு கடத்தவும் உத்தரவு

...

arvoshan.com

தினசரி வட்டி வழங்குவதாகக் கூறி 6.52 லட்சம் பேரிடம் ரூ.1,211 கோடி மோசடி!

...

arvoshan.com

போலி வேலைவாய்ப்பு நேர்காணல் மற்றும் AI கருவி மூலம் Binance நிறுவனத்திடமிருந்து 6.3 பில்லியன் டொலர் திருட்டு!

...