உள்நாட்டு மென்பொருள் புதுப்பிப்பால் Apple சேவைகளில் பாதிப்பு – சேவைகளை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை!
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Apple, அதன் உள்நாட்டு மென்பொருள் புதுப்பிப்பு ஒன்றினால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சேவைகளை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட இந்தத் தொழில்நுட்பக் கோளாறினால், iCloud மற்றும் Apple Pay உள்ளிட்ட வாடிக்கையாளர் சேவைகள் பாதிக்கப்பட்டன.
எனினும், இந்தப் பாதிப்பு சைபர் தாக்குதலால் ஏற்படவில்லை என Apple நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெரும்பாலான கணினி அமைப்புகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எஞ்சியுள்ள அமைப்புகளையும் விரைவில் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக Apple நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க நேரப்படி நண்பகல் 12.20 மணியளவில் Apple Pay சேவையில் ஏற்பட்ட கோளாறு தொடர்பாக சுமார் 2,300 பயனர்கள் புகார் அளித்துள்ளதாக, இணையச் சேவை முடக்கங்களைக் கண்காணிக்கும் Downdetector தளம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, iCloud சேவையில் ஏற்பட்ட பாதிப்பின்போது சுமார் 1,800 பயனர்களிடமிருந்து புகார்கள் பதிவாகியுள்ளன.
எனினும், Downdetector வெளியிடும் புள்ளிவிவரங்கள் பயனர்களால் சமர்ப்பிக்கப்படும் புகார்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட மாறுபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகப் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் பதிவாகியுள்ள நிலையில், Apple நிறுவனத்தின் சேவை முடக்கமும் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் Microsoft நிறுவனத்தின் உலகளாவிய சேவை முடக்கம், அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட கோளாறால் நாடு முழுவதும் விமானங்கள் தரையிறக்கப்பட்ட சம்பவம், United Airlines நிறுவனத்தின் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் JPMorgan Chase வங்கியின் மென்பொருள் பிரச்சினை காரணமாக சில வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
எனினும், இந்தச் சம்பவங்கள் எதுவும் சைபர் தாக்குதல்களுடன் தொடர்புடையவை அல்ல என சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.