ஜனாதிபதி குறிப்புடன் சமூக ஊடகப் பதிவு: 21 வயது மாணவர் மீது பொலிஸ் விசாரணை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விஜயம் மற்றும் குருநாகலை மையப்படுத்திய இரத்தக்களறி தொடர்பான சமூக ஊடகப் பதிவு ஒன்று தொடர்பில், 21 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நிகவெரட்டிய , கொடவெஹெர பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குறித்த மாணவரே இவ்வாறு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (13) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவர் கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதியன்று தனது சமூக ஊடகக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்றைய தினமே நிகவெரட்டிய பகுதி 'இரத்தக் குளமாக' (pool of blood) மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி திசாநாயக்கவின் குருநாகல் விஜயம் மற்றும் கர்மவினை தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பொதுப் பாதுகாப்பு மற்றும் சட்டம் - ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய இத்தகைய சமூக ஊடகப் பதிவுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, அதற்கமைய பொலிஸார் உடனடி விசாரணைகளை ஆரம்பித்ததாகக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த மாணவர் நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், ஐம்பதாயிரம் ரூபா (Rs. 500,000) சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தியுள்ளார்.