களனி ஆற்றுப் படுகை நீரேற்று நிலையத்தை நவீனமயப்படுத்த ஜப்பான் 4.56 பில்லியன் ரூபா நன்கொடை!
வத்தளை மற்றும் பேலியகொட பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில், களனி ஆற்றுப் படுகையிலுள்ள நீரேற்று நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்காக சுமார் 4.56 பில்லியன் ரூபா (456 கோடி ரூபா) நன்கொடையை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் சம்மதம் தெரிவித்து உடன்பட்டுள்ளது.
நிதியமைச்சர், திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
முதுன் எல (Mudun Ela) உப படுகைப் பகுதியில் நிலவும் வெள்ள அபாயத்தைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இதன் மூலம் வட்டள மற்றும் பேலியகொட பகுதிகள் வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்திட்டத்திற்கான முழுமையான நிதி உதவியையும் ஜப்பான் அரசாங்கமே வழங்கவுள்ளது.இதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள இந்த நன்கொடையைப் பெற்றுக்கொள்வதற்காக ஜப்பான் அரசாங்கத்துடன் ராஜதந்திரக் குறிப்புக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவரகத்துடன் (JICA) இதற்கான உடன்படிக்கையை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது.