2027ஆம் ஆண்டிற்கான லிட்ரோ எரிவாயு விநியோகக் குத்தகை 'OQ டிரேடிங்' நிறுவனத்திற்கு வழங்கி அமைச்சரவை ஒப்புதல்
2027ஆம் ஆண்டிற்கான லிட்ரோ எரிவாயு (LPG) விநியோகக் குத்தகையை 'OQ டிரேடிங் லிமிடெட்' (M/s OQ Trading Limited) நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
லிட்ரோ காஸ் லங்கா நிறுவனத்திற்காக 420,000 மெட்ரிக் தொன் (±20%) திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (LPG) விநியோகிப்பதற்காகவே இந்தக் குத்தகை வழங்கப்படவுள்ளது.
2027ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் 12 மாத காலப்பகுதிக்கு நடைமுறைக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் கீழ், குறைந்தபட்சம் 336,000 மெட்ரிக் தொன் எரிவாயு விநியோகம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானத்தின்படி, சவூதி அரம்கோ ஒப்பந்த விலைக்கும் மேலாக, ஒரு மெட்ரிக் தொன்னுக்கு 133.93 அமெரிக்க டொலர் நிலையான கூடுதல் கட்டணத்துடன் (CIF - செலவு, காப்பீடு மற்றும் சரக்குக் கட்டணம் உட்பட) இந்த விநியோகக் குத்தகை வழங்கப்படவுள்ளது.
2027ஆம் ஆண்டிற்கான சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த விலைக்கோரல்களை (Bids) லிட்ரோ காஸ் லங்கா நிறுவனம் கோரியிருந்த நிலையில், அதற்கு நான்கு சர்வதேச நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.
தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவினால் இந்த விலைக்கோரல்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைய, 'OQ டிரேடிங் லிமிடெட்' நிறுவனத்திற்கு இக்கொள்முதல் குத்தகையை வழங்குவதற்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.