சிறைப்படுத்தப்படும் பிக்குகளின் காவி உடை தொடர்பான தீர்மானம் நிக்காயக்களுக்கே உரியது: அமைச்சர் அறிவிப்பு
சிறை தண்டனை விதிக்கப்படும் பௌத்த பிக்குகள் காவி உடையை அணிவதா அல்லது களைவதா என்பது குறித்த தீர்மானத்தை சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் பதிலாக, அவர்கள் சார்ந்த பௌத்த பிரிவுகளான நிக்காயக்களே (Nikayas) மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் பட்சத்தில், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிக்காயக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும், பௌத்த விவகார ஆணையாளர் ஊடாக மூன்று நிக்காயக்களினதும் நான்கு மகாநாயக்க தேரர்களிடம் அரசாங்கம் வழிகாட்டல்களைப் பெறும் என்றும் அவர் விளாக்கினார்.
"சிறை தண்டனை விதிக்கப்படும் பௌத்த பிக்கு ஒருவர் காவி உடையைத் தொடர்ந்து அணிவதா இல்லையா என்ற தீர்மானத்தை சிறைச்சாலை அதிகாரிகள் எடுக்கக் கூடாது. மாறாக, அந்த பிக்கு சார்ந்த நிக்காயவே அதனைத் தீர்மானிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கம்பன்பிலவின் குற்றச்சாட்டுக்கு பதில்
இதேவேளை, கலகொடஅத்தே ஞானசார தேரர் சிறையில் இருந்தபோது அவரது காவி உடை கழற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதிலளித்தார்.
நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய கம்பன்பில, ஞானசார தேரரின் காவி உடை கழற்றப்படுவதை உயர் அரசாங்க அதிகாரி ஒருவர் பார்வையிடுவதற்காக, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தனது கைப்பேசியைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இது ஒரு தீவிரமான விடயம் என்றும் இதனை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னர் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு சம்பவம் உண்மையில் இடம்பெற்றதா, இடம்பெற்றிருந்தால் அது எவ்வாறு நடந்தது என்பதை கண்டறியவே இந்த விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன், தான் கண்டவை, கேட்டவை அல்லது தனக்குக் கூறப்பட்டவை தொடர்பான அனைத்துத் தகவல்களையும் விசாரணையின் போது கம்பன்பில வெளிப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.