குடிநீர், சுகாதார சீர்திருத்தத்திற்கு ADB வங்கியிடமிருந்து $100 மில்லியன் கடன் பெற அமைச்சரவை அனுமதி!
இலங்கையின் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரச் சீர்திருத்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு ஒப்புதல் அளித்துள்ளது. நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் உடன்படிக்கையில் கையெழுத்திடவும் இதன் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானத்தின்படி, இந்த 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில், 50 மில்லியன் அமெரிக்க டொலர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சாதாரண மூலதன வளங்களிலிருந்தும் , எஞ்சிய 50 மில்லியன் அமெரிக்க டொலர் அதன் சலுகை அடிப்படையிலான சாதாரண மூலதன வளங்களிலிருந்தும் பெறப்படவுள்ளது.
இலங்கையின் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறையில் காணப்படும் முக்கிய சவால்களுக்குத் தீர்வுகாணும் நோக்கில், இத்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறிப்பாக, நீர் வள நிர்வாகத்தில் காணப்படும் பலவீனங்கள், தொழிற்பாடு மற்றும் நிதி ரீதியிலான திறனின்மை, காலநிலை மாற்றங்களால் ஏற்படும் அபாயங்கள், சமூகச் சேர்க்கையில் உள்ள குறைபாடுகள் மற்றும் பங்குதாரர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பின்மை ஆகியவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஐந்து கட்டங்களைக் கொண்ட 620 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்கை சார்ந்த கடன் திட்டத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க முன்வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே தற்போதைய நிதி உதவி அமையவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதித் (EFF) திட்டத்திற்கு அமைவாக, இந்த 620 மில்லியன் அமெரிக்க டொலர் நிதித் தொகுப்பைப் பெற்றுக்கொள்வதற்காக 2026 மார்ச் 16 ஆம் திகதி அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது பெறப்பட்டுள்ள புதிய அமைச்சரவை அனுமதியின் மூலம், குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரச் சீர்திருத்தங்களுக்கான நிதி ஒப்பந்தத்தை அரசாங்கம் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளது.