கொழும்பு போதைப்பொருள் பிடிப்பு: நான்கு ஜமேக்கா நாட்டவர்கள் அக்டோபர் 19 வரை தடுத்து வைப்பு
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் பெருமளவான கொகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நான்கு ஜமேக்கா நாட்டுப் பிரஜைகளை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்தச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களுமாக நால்வர் கடந்த அக்டோபர் 12 ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள ஒரு பிரதான விடுதி மற்றும் ஒரு வணிக வளாகம் ஆகியவற்றில் வைத்து இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஆண்கள் 23 மற்றும் 48 வயதுடையவர்கள் ஆவர். பெண்களின் வயது 43 மற்றும் 52 என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த நான்கு சந்தேக நபர்களும் கடந்த அக்டோபர் 13 ஆம் திகதியன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வழினை விசாரித்த நீதவான், சந்தேக நபர்களை எதிர்வரும் அக்டோபர் 19 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த புலனாய்வு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.