நீதித்துறையின் சுதந்திரத்திற்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து குரல் கொடுத்தவர் லால் விஜேநாயக்க – சஜித் புகழாரம்
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து துணிச்சலுடன் செயற்பட்ட லால் விஜேநாயக்கவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அஞ்சலியைச் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது ‘X’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சஜித் பிரேமதாச, இருவரும் வெவ்வேறு அரசியல் அணிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் விடயத்தில் ஒன்றிணைந்து செயற்பட்டதை நினைவுகூர்ந்துள்ளார்.
அவர் ஆளும் தரப்பில் இருந்தார். நான் எதிர்க்கட்சியில் இருந்தேன். எனினும், நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது என்று வந்தபோது இருவரும் ஒரே நிலைப்பாட்டில் நின்றோம் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் பொதுவாகத் தமது தரப்பினரை ஆதரிக்கவும், எதிர்த்தரப்பினரை எதிர்க்கவும் கற்றுக்கொடுக்கப்படுகின்றது. ஆனால், அரசியலைக் காட்டிலும் உயர்வான கொள்கைகளும் விழுமியங்களும் இருப்பதை லால் விஜேநாயக்க நினைவூட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தாம் நம்புகின்ற சரியான விடயத்திற்காக, அது சொந்த அரசியல் தரப்புக்கு எதிரானதாக இருந்தாலும், அசௌகரியமான சூழ்நிலையாக இருந்தாலும் துணிச்சலுடன் குரல் கொடுப்பதே உண்மையான தைரியம் என்றும் சஜித் பிரேமதாச பாராட்டியுள்ளார்.
அரசியல் அதிகாரமும் பதவிகளும் தற்காலிகமானவை. ஆனால், நீதிக்காகவும் சரியான கொள்கைகளுக்காகவும் துணிச்சலுடன் நிற்பவர்கள் விட்டுச் செல்லும் மரபு என்றும் நிலைத்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லால் விஜேநாயக்க வாழ்ந்த வாழ்க்கையை மட்டுமன்றி, அவர் விட்டுச் சென்றுள்ள முன்மாதிரியான பாடத்தையும் நினைவுகூர வேண்டும் எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச, அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.