ABU பொதுக்கூட்டத்துக்கு 10.4 கோடி ரூபாய் அரச நிதி: அமைச்சர் நளிந்த விளக்கம்
கொழும்பில் நடைபெற்ற ஆசிய ஒலிபரப்பு ஒன்றியத்தின் (ABU) 63ஆவது பொதுக்கூட்டத்துக்கு 104 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி அனுசரணை வழங்கப்பட்டமை தொடர்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், இந்த நிதி இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் (SLTPB) ஊடாக வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்த நிதியானது நேரடியாக திறைசேரியிலிருந்து ஒதுக்கப்பட்டதல்ல எனக் குறிப்பிட்ட அவர், சுற்றுலாத்துறை சார்ந்த வரிகள் மற்றும் அறவீடுகள் மூலம் வருமானம் பெறும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திடம் உள்ள நிதியிலிருந்தே வழங்கப்பட்டதாகத் தெளிவுபடுத்தினார்.
இலங்கையை சர்வதேச ரீதியில் சுற்றுலாத் தலமாக ஊக்குவிப்பதே குறித்த பணியகத்தின் பிரதான நோக்கமாகும். இதற்கமைய, நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு அந்தப் பணியகம் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறான அனுசரணை வழங்குவது தொடர்பான முன்மொழிவுகள் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய பணியகத்தின் நிர்வாக சபையினால் மதிப்பீடு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ ஒளிபரப்பாளராக MTV Channel (Pvt) Ltd தெரிவு செய்யப்பட்டமை தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ ஒளிபரப்பாளரைத் தெரிவு செய்தது இலங்கை அரசாங்கம் அல்ல என்றும், ஆசிய ஒலிபரப்பு ஒன்றியமே அந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
66 நாடுகளைச் சேர்ந்த சுமார் 225 ஊடக நிறுவனங்கள் ஆசிய ஒலிபரப்பு ஒன்றியத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளன. இந்நிலையில், கொழும்பில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் சுமார் 350 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய சர்வதேச நிகழ்வுகளை இலங்கையில் நடத்துவதன் மூலம் நாட்டின் சுற்றுலாத் தலங்களை உலகளவில் பிரபலப்படுத்துவதுடன், சர்வதேச ரீதியிலான கவனத்தையும் ஈர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், குறித்த நிதி அனுசரணை வழங்குவதற்கான அனுமதி நடைமுறைகள், ஆரம்பத்தில் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தினால் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டதா மற்றும் அமைச்சரவை அனுமதி பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டமைக்கான காரணம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அனுசரணையின் தொகை அதிகமாக இருந்த காரணத்தினால் அமைச்சரவை அனுமதி அவசியமாகியதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வாய்ப்புகள் தொடர்பில் மதிப்பீடு செய்து தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துக்கு இருப்பதாகவும் விளக்கமளித்தார்.
இதேவேளை, எதிர்வரும் சர்வதேச ஊடக வெளிப்பாடுகள் மூலம் 250 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான விளம்பரப் பெறுமதியை இந்தப் பொதுக்கூட்டம் இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்கும் என இலங்கை சுற்றுலாத்துறை நவம்பர் 2ஆம் திகதி வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுற்றுலாத் தலமாக மட்டுமன்றி, சர்வதேச மாநாடுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை நடத்துவதற்கான இடமாகவும் இலங்கையை உலகளவில் பிரபலப்படுத்த இந்த நிகழ்வு வாய்ப்பளித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிய ஒலிபரப்பு ஒன்றியத்தின் 63ஆவது பொதுக்கூட்டம் ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 3ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
ஆசிய ஒலிபரப்பு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், MTV Channel (Pvt) Ltd உத்தியோகபூர்வ ஒளிபரப்பாளராகவும், இலங்கை சுற்றுலாத்துறை பிரதான அனுசரணையாளராகவும் செயற்பட்டிருந்தது.