வவுனியா ஏ9 வீதியின் புனரமைப்புக்கு 1.3 பில்லியன் ரூபா ஒப்பந்தம்
கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 பிரதான வீதியின் வவுனியா பகுதியில் அமைந்துள்ள மூன்று வீதிப் பகுதிகளைப் புனரமைத்து அபிவிருத்தி செய்வதற்காக 1,318.3 மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்படி, ஏ9 வீதியின் 176 கிலோமீற்றர் முதல் 179 கிலோமீற்றர் வரையான பகுதியில் இந்த அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
குறித்த ஒப்பந்தத்திற்காக ஏழு நிறுவனங்களிடமிருந்து கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டிருந்தன.
அவற்றில், தொழில்நுட்ப ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகக் குறைந்த விலைமனுவைச் சமர்ப்பித்த M/s Kanwel Constructions & Civil Engineering (Pvt) Ltd நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை நியமித்த கொள்வனவுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இதற்கமைய, பெறுமதி சேர் வரி (VAT) தவிர்த்து 1,318.3 மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், இந்த ஒப்பந்தம் வழங்கப்படுவது நிலையான கொள்வனவுக் குழுவின் இணக்கப்பாட்டிற்கு உட்பட்டதாகும்.