சம்பூர் – கப்பல்துறை மின்சார பரிமாற்றத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!
இலங்கையின் மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள சம்பூர் – கப்பல்துறை மின்சாரப் பரிமாற்ற உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, Ceylex Engineering (Pvt) Ltd மற்றும் Xingneng Electric Power Construction Co. Ltd ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சிக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தப் பெறுமதி வரிகள் நீங்கலாக 4.15 மில்லியன் அமெரிக்க டொலர்கள், 0.78 மில்லியன் யூரோக்கள் மற்றும் 1,096.08 மில்லியன் ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், சம்பூரில் 220(132)/33 கிலோவோல்ட் சூரிய மின்சக்தி வலையமைப்பு துணை மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
அத்துடன், கப்பல்துறையில் அமைந்துள்ள 220(132)/33 கிலோவோல்ட் சூரிய மின்சக்தி வலையமைப்பு துணை மின் நிலையமும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
நாட்டின் மின்சாரப் பரிமாற்ற உட்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், தேசிய மின்சாரக் கட்டமைப்பின் வினைத்திறனை உகந்த நிலையில் பேணுவதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
குறித்த திட்டத்திற்கு கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
இதனையடுத்து, ஒப்பந்ததாரரைத் தெரிவுசெய்வதற்காக சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் நடைமுறையின் கீழ் விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில், ஆறு நிறுவனங்கள் தமது விலைமனுக்களைச் சமர்ப்பித்திருந்தன.
விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உயர்மட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கு அமைய, தகுதிவாய்ந்த குறைந்த விலைமனுவைச் சமர்ப்பித்த நிறுவனங்களின் கூட்டு முயற்சிக்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கான எரிசக்தி அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.