நவம்பர் மாத எரிபொருள் விலைத் திருத்தம்: டீசல் விலை இடைவெளி குறைவு; பெட்ரோல் விலை இடைவெளி அதிகரிப்பு
இலங்கையில் நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத் திருத்தத்தின் மூலம், ஓட்டோ டீசலின் சந்தை விலைக்கும் செலவின மீட்பு சூத்திரத்தின் அடிப்படையிலான விலைக்கும் இடையிலான இடைவெளி குறைந்துள்ள அதேவேளை, 92 ஒக்டேன் பெட்ரோலுக்கான விலை இடைவெளி அதிகரித்துள்ளதாக PublicFinance.lk தெரிவித்துள்ளது.
வெரிட்டே ரிசேர்ச் (Verité Research) நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இந்தப் பொது நிதித் தகவல் தளத்தின் எரிபொருள் விலை கண்காணிப்புத் தரவுகளின்படி, அண்மைய விலை அதிகரிப்புக்குப் பின்னரும் 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஓட்டோ டீசல் ஆகிய இரண்டும் செலவின மீட்பு சூத்திரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் விலையை விடக் குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.
இதன்படி, நவம்பர் 1ஆம் திகதி நிலவரப்படி, 92 ஒக்டேன் பெட்ரோலின் சந்தை விலை லீற்றருக்கு 424 ரூபாவாகக் காணப்பட்டதுடன், செலவின மீட்பு சூத்திரத்தின் அடிப்படையிலான விலை 481 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. இதற்கமைய, இரு விலைகளுக்கும் இடையில் லீற்றருக்கு 57 ரூபாய் வித்தியாசம் காணப்படுகிறது.
ஒக்டோபர் மாதத்தில் 92 ஒக்டேன் பெட்ரோலின் சந்தை விலை 414 ரூபாவாகவும், சூத்திரத்தின் அடிப்படையிலான விலை 465 ரூபாவாகவும் இருந்தது. இதன்போது விலை இடைவெளி 51 ரூபாவாகக் காணப்பட்டது.
இதன்படி, நவம்பர் மாதத்தில் பெட்ரோலின் சில்லறை விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும், சந்தை விலைக்கும் சூத்திர விலைக்கும் இடையிலான இடைவெளி மேலும் 6 ரூபாவால் அதிகரித்துள்ளது.
மறுபுறம், ஓட்டோ டீசலின் சந்தை விலை ஒக்டோபர் மாதத்தில் லீற்றருக்கு 392 ரூபாவாக இருந்த நிலையில், நவம்பரில் 397 ரூபாவாக அதிகரித்துள்ளது.
எனினும், டீசலுக்கான செலவின மீட்பு சூத்திரத்தின் அடிப்படையிலான விலை 467 ரூபாவிலிருந்து 459 ரூபாவாகக் குறைந்துள்ளது. இதனால், சந்தை விலைக்கும் சூத்திர விலைக்கும் இடையிலான வித்தியாசம் 75 ரூபாவிலிருந்து 62 ரூபாவாகக் குறைந்துள்ளது.
இதன்படி, நவம்பர் மாத விலைத் திருத்தம் டீசலுக்கான விலை இடைவெளியைக் கணிசமாகக் குறைத்துள்ள போதிலும், பெட்ரோல் விலையில் மேற்கொள்ளப்பட்ட அதிகரிப்பு, இரு விலைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் குறைப்பதற்குப் போதுமானதாக அமையவில்லை என PublicFinance.lk சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், நவம்பர் மாதத்திற்கான செலவின மீட்பு சூத்திரக் கணக்கீட்டில், பொருந்தக்கூடிய மானியங்களைக் கழித்த பின்னர், 92 ஒக்டேன் பெட்ரோலின் ஒரு லீற்றருக்கான நிகர வரிப் பங்கு 150 ரூபாவாகவும், ஓட்டோ டீசலுக்கான நிகர வரிப் பங்கு 67 ரூபாவாகவும் உள்ளதாக அந்தத் தளம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைமுறையிலுள்ள இணக்கப்பாட்டின் அடிப்படையிலான எரிபொருள் விலை நிர்ணய சூத்திரத்தின்படி, சிங்கப்பூர் சந்தையின் எரிபொருள் விலைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சூத்திர விலைகள் கணக்கிடப்படுகின்றன.
இந்த ஆய்வுக்காக இலங்கை மத்திய வங்கி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO), எரிபொருள் விலை சூத்திரக் கணக்கீடுகள் மற்றும் நிதி அமைச்சிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக PublicFinance.lk தெரிவித்துள்ளது.