ஞானசார தேரர் விடுதலை கோரி நடத்தப்பட்ட போராட்டம்: விதிமீறல்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
சிறையில் உள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, சட்டவிதிகளை மீறியதாகவும் அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் போராட்டம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு முறைப்பாடுகளைப் பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா, கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
போராட்டத்தின்போது உரிய அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியவர்கள் மற்றும் கொழும்பு மாநகர சபை அதிகாரிகள், பூங்கா நிர்வாகத்தினர் ஆகியோர் தமது கடமைகளை முன்னெடுப்பதற்குத் தடையாகச் செயற்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் சாகர தயரத்னவினால் இந்த முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
நீதிமன்ற உத்தரவுகளை மீறி பௌத்த பிக்குகள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் விகாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தைத் தொடர்ந்ததாகவும், உரிய அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும், பூங்கா வளாகத்தில் சட்டவிரோதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் உருவப்படங்களை அகற்றுவதற்கு முயன்ற மாநகர சபை அதிகாரிகளின் கடமைகளுக்கு போராட்டக்காரர்கள் இடையூறு ஏற்படுத்தியதாகவும் மற்றுமொரு முறைப்பாட்டில் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதற்காக அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் காணொளிப் பதிவுகளைப் பரிசோதிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அடையாளம் காணப்படும் நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த போராட்டம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸார் முன்னர் பெற்றிருந்த இடைக்கால நீதிமன்ற உத்தரவு தொடர்பான வழக்கு நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போராட்டம் நிறைவடைந்துவிட்டதாகப் பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.