டித்வா புயலால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க ரூ. 3.3 பில்லியன் ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி!
டித்வா புயலினால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைத்து மேம்படுத்துவதற்காக சுமார் 3.33 பில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, சேதமடைந்த பல வீதிப் பகுதிகளைப் புனரமைப்பதற்காக தேசிய போட்டி விலைமனுக் கோரல் நடைமுறையின் கீழ் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருந்தன.
பெறப்பட்ட விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, உயர்மட்ட கொள்வனவுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், குறைந்த விலையில் தகுதியான விலைமனுக்களைச் சமர்ப்பித்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, கம்பளை – நாவலப்பிட்டி (B013) வீதியின் 8.5 முதல் 16.3 கிலோமீற்றர் வரையான பகுதியையும், உலப்பனை – பூஸ்ஸல்லாவ (B431) வீதியின் 0 முதல் 6.44 கிலோமீற்றர் வரையான பகுதியையும் புனரமைத்து மேம்படுத்துவதற்காக 852.83 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒப்பந்தம் ELS Construction (Pvt) Ltd நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நான்கு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்.
அதேவேளை, B461 வீதியின் 11 முதல் 27.7 கிலோமீற்றர் வரையான 16.77 கிலோமீற்றர் பகுதியைப் புனரமைத்து மேம்படுத்துவதற்காக 1,516.08 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒப்பந்தம் Jayasinghe Contractors (Pvt) Ltd நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, குறித்த வீதியின் 27.7 முதல் 30.8 கிலோமீற்றர் வரையான பகுதியில் வடிகால் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் தாங்குச் சுவர்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தப் பணிகளை இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கட்டுகஸ்தோட்டை – மடவளை – பம்பரல்ல (B205) வீதியின் 19 முதல் 34 கிலோமீற்றர் வரையான 15 கிலோமீற்றர் பகுதியைப் புனரமைத்து மேம்படுத்துவதற்காக 965.37 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒப்பந்தம் RR Construction (Pvt) Ltd நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனுடன், வத்தேகம – கண்டேனுவர – வாரியபொல வீதியின் முதலாம் கிலோமீற்றர் முதல் ஐந்தாம் கிலோமீற்றர் வரையான நான்கு கிலோமீற்றர் பகுதியில் சேதமடைந்த வீதிப் பகுதிகள் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சீரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தப் பணிகளை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்ய ஒப்பந்தக் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்டுள்ள மூன்று ஒப்பந்தங்களினதும் மொத்தப் பெறுமதி 3,334.28 மில்லியன் ரூபாயாகும். இந்தத் தொகையில் பெறுமதி சேர் வரி (VAT) உள்ளிட்ட ஏனைய பொருந்தக்கூடிய வரிகள் உள்ளடக்கப்படவில்லை.