கிரிஷ் ஒப்பந்த மோசடி வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை – எனினும் தொடர்ந்து விளக்கமறியலில்
கிரிஷ் நிறுவனத்துடனான சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.
எனினும், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
வேறு வழக்குகள் தொடர்பிலும் பிணை பெறாத காரணத்தினால், நாமல் ராஜபக்ஷ தொடர்ந்து விளக்கமறியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள டிரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கத்திலுள்ள காணியை பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்காக கிரிஷ் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு உதவியமைக்காக, 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக நாமல் ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த காணி கிரிஷ் நிறுவனத்திற்கு மாற்றப்படுவதற்கு வசதியாகச் செயற்பட்டமைக்காக இந்தப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், குறித்த வழக்கில் நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு தொடர்பான தீர்மானத்தை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.