எளிய முறையில் வீடு கட்ட தருவதாக மோசடி: கைதான இரு பெண்கள் விளக்கமறியலில் வைப்பு!
எளிய முறையில் தவணை முறையில் வீடுகளைக் கட்டித் தருவதாகக் கூறிப் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த தனியார் நிறுவனத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் எதிர்வரும் செப்டம்பர் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மிஹிரான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 30 மற்றும் 31 வயதுடைய இரு பெண்களுமே இவ்வாறு நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் (Nugegoda Magistrate's Court) ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நிறுவனத்தின் பிரதம விற்பனை மேலாளராகவும் செயல்பாட்டு அதிகாரியாகவும் கடமையாற்றிய இவர்க இருவருமே வியாழக்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்களிடம் பெருந்தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்குறுதியளித்தபடி வீடுகளைக் கட்டித்தரத் தவறியமை தொடர்பில் குறித்த நிறுவனத்திற்கு எதிராக இதுவரை 245 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன், சந்தேகநபர்களுக்குச் சொந்தமான நான்கு சொகுசு கார்களும் புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த நிதி மோசடி தொடர்பில் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் கடந்த ஜூலை 28 ஆம் திகதி ஏற்கனவே கைது செய்யப்பட்டு, எதிர்வரும் செப்டம்பர் 29 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.