இலங்கையின் நிலையான வர்த்தகத்தை மேம்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் 10 மில்லியன் யூரோ நிதியுதவி – அமைச்சரவை அனுமதி
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான நிலையான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், 10 மில்லியன் யூரோ நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் இந்த நிதியுதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
பசுமை மாற்ற முயற்சிகளை ஊக்குவித்தல், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தாங்கக்கூடிய வர்த்தக நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், வர்த்தகத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் செயற்திறனை மேம்படுத்துவதுடன், ஐரோப்பிய ஒன்றியச் சந்தையில் இலங்கைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான சர்வதேச தரநிலைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இத்திட்டம் ஆதரவளிக்கவுள்ளது.
இத்திட்டம் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நான்கு வருட காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் நிதியுதவி ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த முன்மொழிவுக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.