இறுதி ஊர்வலத்தில் வி.எஸ்.பாபுவின் உடலைத் தோளில் சுமந்த முதல்வர் விஜய்!
உயிரிழந்த தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் விஜய், அவரது உடலைத் தனது தோளில் சுமந்து சென்ற சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, மாரடைப்பு காரணமாக நேற்று (19) உயிரிழந்தார். அவருக்கு வயது 75.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினைத் தோற்கடித்து வெற்றி பெற்றவர்களில் ஒருவரான வி.எஸ்.பாபுவின் மறைவுக்கு ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த உடலுக்கு முதல்வர் விஜய் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில், வி.எஸ்.பாபுவின் உடலைத் தனது தோளில் சுமந்த முதல்வர் விஜய், சிறிது தூரம் நடந்து சென்றார். பின்னர், இறுதி ஊர்வல வாகனத்தின் பின்னால் சோகத்துடன் நடந்து சென்றார். முதல்வரின் இந்தச் செயல் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திரு.வி.க. நகர், பல்லவன் சாலையில் அமைந்துள்ள தாங்கல் மயானத்தில் வி.எஸ்.பாபுவின் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
இறுதி ஊர்வலத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக அமைச்சர்கள், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு பெரம்பூர் மற்றும் பல்லவன் சாலை பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.