நவம்பர் 15ஆம் திகதிக்குள் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதிக்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அந்தமான் கடல் மற்றும் அதனை அண்மித்த அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் நிலவும் வளிமண்டலச் சுழற்சியின் தாக்கத்தினால், இன்று (13) காலை 5.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வானிலை அமைப்பு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நவம்பர் 14ஆம் திகதியளவில் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறுவதுடன், நவம்பர் 15ஆம் திகதிக்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கமாக, நவம்பர் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் அந்தமான் கடல் பகுதிகளிலும், நவம்பர் 13 முதல் 16ஆம் திகதி வரை தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்திலும், அவ்வப்போது 60 கிலோமீற்றர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நவம்பர் 15 முதல் 17ஆம் திகதி வரை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும், நவம்பர் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் மத்திய வங்கக் கடல் பகுதிகளிலும் மணிக்கு 55 கிலோமீற்றர் வேகத்திலும், அவ்வப்போது 65 கிலோமீற்றர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால் குறித்த காலப்பகுதியில் கடல் பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.