ஆசிரியர் சேவையில் கல்வியியல் பட்டதாரிகள்: திருத்தம் வந்ததும் நியமனம் என பிரதமர் அறிவிப்பு
ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தப் பணிகள் நிறைவடைந்த உடனேயே, கல்வியியல் பட்டதாரிகளை (B.Ed. Graduates) இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில், ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்தரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இக்கலந்தரையாடல் கடந்த ஒக்டோபர் 02 ஆம் திகதி இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் நடைபெற்றது.
அரசுப் சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் மற்றும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கவனத்திற் கொண்டே இந்தத் திருத்தங்கள் உருவாக்கப்படவுள்ளன.
இச்சந்திப்பின் போது, முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் முறைகள் குறித்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் விரிவாக ஆராயப்பட்டது. தேவைப்படும் சட்டத் திருத்தங்கள் நிறைவுற்றதும், பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளைச் சேவையில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார்.
மேலும், ஆசிரியர் பயிற்சியை வலுப்படுத்துதல், கல்வியியல் கல்லூரிகளை மேம்படுத்துதல் மற்றும் ஆசிரியர், அதிபர் சேவைகள் உள்ளடங்கலாகக் கல்வித் துறையைச் சேர்ந்த ஆறு முக்கிய சேவைகளின் தொழில்முறைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, 'கல்வித் தொழில்சார் பேரவை' ஒன்றினை அமைப்பதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதிநிதிகளுக்குப் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
இக்கலந்தரையாடலில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.