இளைஞர் அரசியல் தலைமையை வலுப்படுத்த புதிய திட்டம்: WFD உடன் நாடாளுமன்ற மன்றம் பேச்சு
இளைஞர்களின் அரசியல் பங்கேற்பு, தலைமைத்துவப் பண்புகள் மற்றும் மன்றத்தின் எதிர்கால வேலைத்திட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பாக, வெஸ்ட்மின்ஸ்டர் ஜனநாயகத்திற்கான அறக்கட்டளையின் பிரதிநிதிகளுக்கும் நாடாளுமன்ற இளைஞர் மன்றத்திற்கும் இடையிலான சிறப்புச் சந்திப்பொன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
பிரதியமைச்சர் எரங்க குணசேகர தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், இளைஞர் மன்றத்தின் எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆதரவு, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் தலைமைத்துவ அபிவிருத்தி திட்டங்களை WFD அமைப்பிடமிருந்து பெற்றுக்கொள்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அரசியல் செயல்பாடுகள், கொள்கை வகுத்தல் மற்றும் நல்ஆளுமை ஆகியவற்றில் இளைஞர்களை முனைப்புடன் ஈடுபடுத்துவதன் அவசியத்தை இதன்போது இருதரப்புப் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர். குறிப்பாக, தேர்தல் காலங்களுடன் மட்டும் இளைஞர்களின் பங்களிப்பைக் குறுக்கிவிடாமல், அரசியல் மற்றும் கொள்கை சார்ந்த உரையாடல்களில் அவர்களைத் தொடர்ச்சியாக ஈடுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், இளைஞர்கள் எதிர்கொள்ளும் வேலையின்மை உள்ளிட்ட சமூக-பொருளாதார சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில், அவர்களின் தலைமைத்துவத்தையும் அரசியல் பங்கேற்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிறப்புப் பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.