திருமணங்களில் பாடல் பாடக் கட்டணம்? பரவும் வதந்திக்கு அமைச்சர் விஜித ஹேரத் மறுப்பு!
இலங்கையின் மேதைமைச் சொத்துரிமை சட்டங்களின் கீழ், திருமண நிகழ்வுகள் மற்றும் விடுதிகளில் (Hotels) பாடல்களைப் பாடுவதற்குப் கட்டணம் செலுத்த வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களை அமைச்சர் விஜித ஹேரத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், முகநூலில் (Facebook) பகிரப்பட்டு வரும் செய்திகள் உண்மைக்குக் புறம்பானவை எனக் குறிப்பிட்டார். பாடகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் படைப்புகளை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
டிக்கெட்டுகள் விற்கப்பட்டு, லாப நோக்கோடு நடத்தப்படும் வணிக ரீதியிலான இசை நிகழ்ச்சிகளில், பிற படைப்பாளிகளின் பாடல்கள் பாடப்படும்போது மட்டுமே இந்தக் கட்டண முறைமை தொடர்பில் பேசப்படுவதாக அவர் விளக்கம் அளித்தார்.
இவ்வாறான லாபம் ஈட்டும் நிகழ்ச்சிகளில் படைப்புகள் பயன்படுத்தப்படும்போது, அதற்கான உரிய பங்கு மூலப் படைப்பாளிகளுக்குச் சென்றடைய வேண்டும் என இலங்கை படைப்பாளிகள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் வலியுறுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் பரவிய தவறான தகவல்களைத் தொடர்ந்து, இது குறித்து தெளிவுபெறுவதற்காகத் தாம் நேரடியாகவே குறித்த சங்கத்துடன் தொடர்புகொண்டு பேசியதாக அவர் தெரிவித்தார்.
"திருமண நிகழ்வுகளிலோ அல்லது விடுதிகளிலோ பாடல்களைப் பாடுவதற்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற எந்தவொரு நடைமுறையும் இல்லை. கட்டணம் செலுத்தாமல் திருமணங்களில் பாடல்களைப் பாட முடியாது என முகநூலில் பகிரப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை" என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
வர்த்தக நோக்கில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு நடத்தப்படும் நிகழ்வுகளில் பாடப்படும் பாடல்களின் சொந்தக்காரர்களுக்கு, அவர்களின் படைப்பிற்கான உரிய இழப்பீடு அல்லது ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதே சங்கத்தின் நிலைப்பாடு என அவர் மேலும் விளக்கினார்.
மேதைமைச் சொத்துப் பாதுகாப்பின் கீழ், தங்களின் படைப்புகளுக்குரிய அங்கீகாரமும் நிதி ரீதியான மதிப்பும் கிடைக்க வேண்டும் என பாடகர்களும் இசைக்கலைஞர்களும் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.