ஞானசார தேரரை மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பூஜ்ய கலபொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகளால் ஞானசார தேரர் இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை തുടர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னைய வழக்கு விசாரணைகளின் போது, ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைக் கவனத்தில் கொண்ட நீதிபதிகள் குழாம், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்தது.