ஹம்பாந்தோட்டை துறைமுகம் 10 லட்சம் கொள்கலன் கையாளுகையை கடந்து சாதனை
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் (HIP) தனது கொள்கலன் நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் புதிய கப்பல் கரேன் (quay crane) இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, இதுவரையிலான மொத்த கொள்கலன் கையாளுகை 10 லட்சம் இருபது அடி சமமான அலகுகளை (TEUs) கடந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமம் (HIPG) தெரிவித்துள்ளது.
இத்துறைமுகம் 2025 ஆம் ஆண்டில் 428,036 TEU கொள்கலன்களையும், 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 574,196 TEU கொள்கலன்களையும் கையாண்டுள்ளது. இதன் மூலம் இதன் மொத்த கையாளுகை 1,002,232 TEU அலகுகளாக உயர்ந்துள்ளது.
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) வில்சன் கு கருத்து தெரிவிக்கையில், இந்த மைல்கல்லை எட்டியமையானது வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் நம்பிக்கையையும், பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் துறைமுகம் ஒரு வலுவான கொள்கலன் மையமாக உருவெடுத்து வருவதையும் காட்டுகிறது என்றார். கப்பல் நிறுவனங்களுடனான செயற்திறன்மிக்க தொடர்பு, உயர் செயல்பாட்டு நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப மாற்றங்களை மேற்கொள்ளும் திறன் ஆகியவையே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதன்மை கொள்கலன் துறை பங்காளியான மெடிடரேனியன் ஷிப்பிங் கம்பனி (MSC), இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. 2026 ஏப்ரலில், ‘எம்.எஸ்.சி மேரி லெஸ்லி’ (MSC Marie Leslie) என்ற ஒரேயொரு கப்பலில் இருந்து 7,968 கொள்கலன்களை (13,260 TEUs) இறக்கி ஏற்றி துறைமுகம் புதிய சாதனை படைத்தது. முன்னதாக மார்ச் மாதத்தில் ‘எம்.எஸ்.சி இலேனியா’ (MSC Ilenia) மற்றும் ‘எம்.எஸ்.சி ரூபி’ (MSC Ruby) ஆகிய கப்பல்கள் படைத்த சாதனைகளை இது முறியடித்தது.
இந்த தொடர் வளர்ச்சியின் பயனாக, 2026 ஜூன் மாதத்தில் துறைமுகம் தனது வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாக ஒரே மாதத்தில் 80,325 TEU கொள்கலன்களைக் கையாண்டு புதிய உச்சத்தை தொட்டது. உலகளாவிய வர்த்தகப் பாதைகளில் இடையூறுகள் நிலவியபோதிலும், துறைமுகத்தின் செயல்பாட்டுத் திறனையும் வலுவான கப்பல் நிறுவனப் பங்காண்மையையும் இந்த சாதனை வெளிப்படுத்துவதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆண்டுக்கு 20 லட்சம் TEU கொள்கலன்களைக் கையாளும் இலக்கை அடைவதற்காக, ஹம்பாந்தோட்டை துறைமுகம் தற்போது பாரிய விரிவாக்கத் திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகிறது. கொள்கலன் கையாளும் உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்காக 108 மில்லியன் அமெரிக்க டாலர் (USD) முதலீட்டில், 6 புதிய கப்பல் கரேன் இயந்திரங்கள் மற்றும் 16 ரப்பர் டயர் கன்ட்ரி கேரேன்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இவை 2027 பிப்ரவரி இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விரிவாக்கத் திட்டமானது கப்பல்களுக்கான சேவை நேரத்தைக் குறைப்பதுடன், கூடுதல் 1,300 மீட்டர் கப்பலணையும் தளத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரும். இதன் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மொத்த கொள்கலன் கப்பலணை நீளம் ஏறத்தாழ இரண்டு கிலோமீட்டராக அதிகரிக்கும். மேலும், கொள்கலன் முற்றம் 30 சதவீதத்தால் விரிவாக்கப்பட்டு, குளிரூட்டப்பட்ட கொள்கலன் வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளன.
இந்த முதலீடு அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப சரியாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி (COO) டாமி யவாங், இந்த உள்கட்டமைப்பு மேம்பாடுகள் பெரிய அளவிலான கப்பல்களுக்குத் திறம்பட சேவையாற்றவும், அடுத்தகட்ட வளர்ச்சியைத் தக்கவைக்கவும் உதவும் எனத் தெரிவித்தார்.