அபாயகரமான வேலைகளில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் ரூ. 100,000 அபராதம்: பிரதமர் அறிவிப்பு
நவீன சமூக மற்றும் தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில், பிள்ளைகளின் மன ரீதியிலான பாதுகாப்பு, மன நலம் மற்றும் தன்னம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட கேட்போர் கூடத்தில் இன்று (01) இடம்பெற்ற தேசிய சிறுவர் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் வழிகாட்டலின் கீழ், சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை சேவைகள் திணைக்களம் "மன ரீதியாக வலுவான, வலுவூட்டப்பட்ட சிறுவர்கள்" என்ற கருப்பொருளில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
"டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை சிறுவர்கள் கல்வியில் நன்முறையில் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் அதேவேளையில், இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான வழிகாட்டும் உள்ளடக்கங்களால் ஏற்படும் வன்முறைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான சட்ட மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை அரசாங்கம் வலுப்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில், சிறுவர்களுக்கு அளிக்கப்படும் உட ரீதியிலான தண்டனைகள் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தல்களைத் தடுத்து, அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் ஒழுக்கவியல் முறைகளை ஊக்குவிப்பதற்கான சீர்திருத்தங்களை நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
அதேநேரம், பொருளாதார ரீதியிலான சுரண்டல்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர் வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ், அபாயகரமான வேலைகளில் சிறுவர்களை ஈடுபடுத்துவோருக்கான தண்டப் பணத்தை (Fine) 10,000 ரூபாவிலிருந்து 100,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்பள்ளி கல்வியை ஒரே தேசிய தரத்தின்கீழ் முறைப்படுத்துதல், முன்பள்ளிகளைப் பதிவுசெய்து ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் மற்றும் ஆசிரியர்களுக்கான கட்டாய தொழில்முறைத் தகுதிகள் மற்றும் பயிற்சிகளை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், முன்பள்ளிப் பருவத்தில் பிள்ளைகளை எழுத்துக்களையும் எண்களையும் எழுதுமாறு கட்டாயப்படுத்துவதை விட, விளையாட்டு மூலமாக அவர்களின் சமூகத் திறன்களையும் ஆளுமையையும் வளர்ப்பதே மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டார். மொழி, மதம் அல்லது புவியியல் வேறுபாடுகளின்றி ஒவ்வொரு பிள்ளையும் பாதுகாப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதனை அரசாங்கம் மட்டுமே தனித்துச் செய்ய முடியாது எனவும், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் முழுச் சமூகமும் இணைந்து இந்த வழுவான பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், "முதியவர்களாகிய நாம் சிறுவர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன் நின்றுவிடாமல், அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாகவும் திகழ வேண்டும். பிள்ளைகள் விடயத்தில் இதுவரை இழைக்கப்பட்ட தவறுகளையும் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து, அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கமாக நாங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட்டு வருகிறோம்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் சொந்த வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளாமல் விழிப்புடன் பாதுகாக்குமாறும், அவர்களுக்குத் தேவையான கவனத்தைச் செலுத்தி அவர்களின் கருத்துக்களைக் கேட்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். ஆசிரியர்கள் வெறும் பாடங்களை மட்டும் கற்பிக்காமல், வாழ்க்கையையும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
தொழில் என்பது வெறும் வருமானம் ஈட்டும் வழிமுறையல்ல, அது ஒரு சமூகப் பொறுப்பு என்பதைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே சிறந்ததொரு நாட்டை உருவாக்க முடியும். ஒருவரையொருவர் புரிந்துணர்வுடனும் அக்கறையுடனும் நடத்தும் போது மட்டுமே சமூகத்தில் நிலவும் வன்முறை மற்றும் துஷ்பிரயோகச் சுழற்சியை உடைத்தெறிய முடியும்" எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்சன, நாடாளுமன்ற உறுப்பினர் அருண பனகொட, ஹோமாகம பிரதேச சபையின் தவிசாளர் கசுன் ரத்நாயக்க, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்கிரமசிங்க, வெளிநாட்டுத் தூதுவர்கள், சர்வதேசப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.