மன்னார் மடு வீதியில் சிறுத்தை புலிகளின் நடமாட்டம்: எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு மக்களுக்கு கோரிக்கை
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் அமைந்துள்ள மடு சந்தியில் இருந்து மடு திருத்தலத்திற்கு செல்லும் பிரதான பாதையில் இரவு நேரங்களில் இரண்டு சிறுத்தை புலிகளின் நடமாட்டம் காணப்படுவதாக பிரதேச மக்களும் பயணிகளும் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக வீதிக்கு அருகில் உலாவி வரும் இந்நல்ல வளர்ந்த சிறுத்தை புலிகள், மனித நடமாட்டத்தைக் கண்டு அச்சப்படாமல் வாகனங்களுக்கு அருகாமையிலும் வருவதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான காணொளிகளும் (Videos) சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
எனவே, இரவு வேளைகளில் மடு திருத்தலத்திற்குச் செல்லும் பக்தர்கள், பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வீதியில் பயணிக்கும் போது மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அத்துடன், வீதியோரத்தில் தேவையற்ற முறையில் வாகனங்களை நிறுத்துவதையோ, சிறுத்தை புலிகளை புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதற்காக அருகில் செல்வதையோ முற்றாகத் தவிர்க்குமாறு விழிப்புணர்வு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.