இந்தியாவில் $19 பில்லியன் மதிப்பிலான பசுமை ஆற்றல் திட்டத்திற்கு ஒப்புதல்
இந்தியாவில் 135 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை விநியோகிப்பதற்காக, மின்கல சேமிப்பு அமைப்புகளுடன் கூடிய மாநிலங்களுக்கு இடையிலான மின் கடத்தல் திட்டத்தை நிறுவ இந்திய மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 1.86 ட்ரில்லியன் ரூபாய்க்கும் (19.42 பில்லியன் அமெரிக்க டொலர்) அதிகமான நிதியொதுக்கீட்டில் 'பசுமை ஆற்றல் வழித்தடம் - கட்டம் III' திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டிற்குள் 500 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அடைவதை இலக்காகக் கொண்டுள்ள இந்தியாவிற்கு, இந்தத் திட்டம் மிக முக்கியப் படியாகக் கருதப்படுகிறது. மேலும், 2035ஆம் ஆண்டிற்குள் 900 கிகாவாட் புதைபடிவமற்ற (Non-fossil) மின்சார உற்பத்தித் திறனை எட்டும் இலக்கிற்கும் இது வழிவகுக்கும்.
மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு இடையே புதுப்பிக்கத்தக்க ஆற்றலை தடையின்றி விநியோகிக்கும் பொருட்டு, மாநிலங்களுக்கு உட்பட்ட மின் கடத்தல் அமைப்பை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ், கட்டமைப்பு நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்யவும், உச்ச நேர மின் தேவையைப் பூர்த்தி செய்யவும் 50 கிகாவாட்-மணி நேர (GWh) மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் நிறுவப்படவுள்ளன.
2032-33ஆம் நிதியாண்டிற்குள் முழுமையடைவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு 1,86,405 கோடி ரூபாயாகும். இதில் மாநிலங்களுக்கு உட்பட்ட மின் கடத்தல் கட்டமைப்பு உருவாக்கத்திற்கு 1,36,378 கோடி ரூபாயும், மின்கல சேமிப்பு அமைப்புகளுக்கு 50,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்திற்கு இந்திய மத்திய அரசு 54,082 கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்கவுள்ளது. இதன் மூலம் மின் கடத்தல் கட்டணங்கள் குறைக்கப்பட்டு, இறுதி நுகர்வோரான இந்திய மக்களுக்குக் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கப்பெறும்.
இத்திட்டம் நாட்டின் நீண்டகால ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, கார்பன் உமிழ்வைக் குறைத்து சுற்றுச்சுழல் சமநிலையைப் பேண உதவும். அத்துடன், மின் உற்பத்தி, உற்பத்தித் துறை மற்றும் கட்டுமானத் துறைகளில் பெருமளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளையும் இத்திட்டம் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.