கற்பிட்டியில் அரிதான கடல் சங்குகளுடன் சந்தேகநபர் கைது
வான்படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு முனைந்த 20 அரிதான கடல் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (01) கற்பிட்டி நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் வனஜீவிகள் உதவிப் பணிப்பாளர் பணிமனை மற்றும் கற்பிட்டி வனஜீவிகள் பிராந்திய அலுவலக உத்தியோகத்தர்கள் இணைந்தே இந்தச் சோதனையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, பாதுகாக்கப்பட்ட அரிய வகையான 'ஸ்ரீலங்கா மேப் கவுரிஸ்' வகையைச் சேர்ந்த 10 சங்குகளும், 'டைகர் கவுரிஸ்' (Tiger Cowries) வகையைச் சேர்ந்த 10 சங்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றை வைத்துள்ளமை மற்றும் விற்பனை செய்ய முயன்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடல் சங்குகளும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி கற்பிட்டி நடமாடும் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.