அதிக விலைக்கு குடிநீர் விற்பனை: பம்பலப்பிட்டி உணவகத்திற்கு 10 இலட்சம் அபராதம்
கொழும்பு, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி, குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்பட்டமையால் குறித்த உணவகத்திற்கு 10 இலட்சம் ரூபா (1 மில்லியன் ரூபா) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 04, காலி வீதியில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் (CAA - Consumer Affairs Authority) கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. வழக்கின் போது குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் இந்த தண்டப் பணத்தை விதித்து உத்தரவிட்டுள்ளது.
2492/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 96 ஆம் இலக்க கட்டளையின் பிரகாரமாக, 500 மில்லி லீற்றர் முதல் 999 மில்லி லீற்றர் வரையிலான போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த உணவகமானது 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தல் ஒன்றை 100 ரூபாவிற்கு விற்பனை செய்து, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 20 ரூபாவை மேலதிகமாக அறவிட்டு நுகர்வோர் பாதுகாப்பு விவாதங்களை மீறியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உணவகங்கள், விடுதிகள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் தங்களது வளாகத்திற்குள் சேவைகளை வழங்கினாலும் அல்லது விற்பனை செய்தாலும், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முடியாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
எனவே, நுகர்வோர்கள் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கும் போது, அட்டவணையில் உள்ள விலையையும் கட்டணப் பட்டியலையும் (Bill) சரிபார்க்குமாறும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகக் கட்டணம் அறவிடப்பட்டால், அதற்கான சான்றாக அப்பட்டியலை வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசாங்க வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடரும் என எச்சரித்துள்ள அதிகாரசபை, இத்தகைய சட்டவிரோத விற்பனைகள் தொடர்பில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் முறைப்பாடு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.