விமானப்படைக்கு ஆளில்லா விமானக் கண்காணிப்பு கட்டமைப்பு: 4,261 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டுக்கு நாளை நாடாளுமன்றத்தில் விவாதம்
இலங்கை விமானப்படைக்கான ஆளில்லா விமான (UAV) கட்டமைப்பை உருவாக்குவதற்கு 4,261 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான துணை மதிப்பீட்டு அறிக்கை நாளை (நவம்பர் 5) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (நவம்பர் 4) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில், 2026ஆம் ஆண்டுக்கான எட்டாவது துணை மதிப்பீட்டு அறிக்கையை நாளை விவாதித்து அங்கீகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த நிதி ஒதுக்கீட்டுக்காக அரசின் ஒருங்கிணைந்த நிதியத்திலிருந்தோ அல்லது வேறு அரச நிதியத்திலிருந்தோ 4,261 மில்லியன் ரூபாயை இலங்கை விமானப்படைக்கு வழங்குவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மோசமான வானிலை மாற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு, மாறிவரும் செயற்பாட்டு சூழலுக்கு முகங்கொடுக்கும் வகையில் இந்த ஆளில்லா விமானக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இதேவேளை, ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள அறக்கட்டளைகள் (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதமும் நாளை காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
எனினும், அரசியலமைப்பின் 121ஆம் உறுப்புரையின் கீழ் குறித்த சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படாத பட்சத்திலேயே இந்த விவாதம் இடம்பெறும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள அலுவல்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரலில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.