ரூ. 5.1 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு: தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளருக்கு பிணை
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC) நிர்வாகம் மற்றும் மனிதவளப் பிரிவின் பணிப்பாளரான மனுல சாமல் பெரேரா, ரூ. 5.1 மில்லியன் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (04) கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதுடன், வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம், சமபுர பகுதியில் அமைந்துள்ள கட்டடமொன்றை குத்தகைக்கு எடுத்தல் மற்றும் புனரமைத்தல் தொடர்பான முறைகேடுகள் காரணமாக அரசாங்கத்திற்கு 5.1 மில்லியன் ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டடத்தை குத்தகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தத்தின் கீழ், 3.8 மில்லியன் ரூபாய் முறையற்ற வகையில் மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபையின் முறையான அனுமதியின்றி, குறித்த கட்டடத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக மேலும் 1.3 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த இரண்டு பரிவர்த்தனைகளின் ஊடாகவும் அரசாங்கத்திற்கு மொத்தம் 5.1 மில்லியன் ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.