“ரட்டம ஏகட” தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஓராண்டு நிறைவு: நாளை சர்வமத மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு
போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் “ரட்டம ஏகட” (Ratama Ekata – ஒன்றிணைந்த நாடு) தேசிய நடவடிக்கையின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நாளை (நவம்பர் 5) நடைபெறவுள்ள விசேட சர்வமத மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கவுள்ளார்.
“ஒன்றிணைந்து எழும் ஓராண்டு” (A Year Rising Together) என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு நிறைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசிய நடவடிக்கையின் ஊடாக, போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல், போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தல், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஓராண்டு நிறைவையொட்டி, நாளை பிற்பகல் 2 மணிக்கு அலரி மாளிகையில் விசேட சர்வமத மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதியுடன் மகா சங்கத்தினர், இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் கலந்துகொண்டு, போதைப்பொருள் ஒழிப்புக்கான ஒருமித்த செய்தியை சமூகத்துக்குக் கொண்டு செல்லவுள்ளனர்.
இதனுடன் இணைந்ததாக, நாளை காலை 8 மணிக்கு “போதைப்பொருளற்ற ஆரோக்கியமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் பொதுமக்கள் விழிப்புணர்வுப் பேரணியும் நடைபெறவுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமாகும் இந்தப் பேரணி, கொள்ளுப்பிட்டி சந்தி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அலுவலகம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு, தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், பாதுகாப்புப் படையினர், சிவில் அமைப்புகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்காகச் செயற்படும் தன்னார்வக் குழுக்கள் இணைந்து இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே மேலும் வலுப்படுத்துவதே இந்நிகழ்வுகளின் பிரதான நோக்கமாகும்.