தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பிலிருந்து விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்!
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கொழும்பிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக இலங்கை போக்குவரத்துச் சபையும் (SLTB), தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் (NTC) இணைந்து விசேட பேருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளன.
எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், நவம்பர் 6ஆம் திகதி முதல் பெருமளவிலான பயணிகள் கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் மற்றும் பஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நவம்பர் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்து ஹட்டன், தலவாக்கலை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளுக்குப் பயணிக்கும் பேருந்துகளுக்கான பெருமளவிலான ஆசனங்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு நிறைவடைந்துள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் ஆசன முன்பதிவு சேவையை நிர்வகிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று, யாழ்ப்பாணம், வவுனியா, பதுளை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கான பேருந்து ஆசனங்களும் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
எனவே, தீபாவளி காலப் பகுதியில் ஏற்படக்கூடிய அதிகளவிலான பயணிகள் நெரிசலைத் தவிர்த்து, சிரமமின்றிப் பயணங்களை மேற்கொள்வதற்காகப் பயணிகள் முன்கூட்டியே தங்களது பேருந்து ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ளுமாறு போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்காக 1315.lk அல்லது sltbeseat.lk ஆகிய இணையத்தளங்களைப் பயன்படுத்தி ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ள முடியும்