இலங்கையின் புதிய குற்றச்செயல் தடுப்புச் சட்டமூலம்: 11 முக்கிய விடயங்கள் குறித்து ஐ.நா கவலை

arvloshan.com

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலத்தில் (Prevention of Organised Crimes Bill) உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு ஏற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி தொலைபேசி அழைப்பு விபரங்கள், சந்தாதாரர்களின் தகவல்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் இருப்பிடத் தகவல்களைப் பொலிஸார் பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் ஏற்பாடு தனிநபர் அந்தரங்க உரிமையைப் பாதிக்கக்கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒக்டோபர் 30ஆம் திகதியிடப்பட்ட 31 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் இந்தக் கவலைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த சட்டமூலத்தின் 44(4) ஆவது பிரிவின்படி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) பதவியிலுள்ள அதிகாரி ஒருவர் நீதிமன்ற உத்தரவைப் பெறாமல் தொலைத்தொடர்பு மற்றும் தரவு சேவை வழங்குநர்களிடமிருந்து தகவல்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் மூலம் தொலைபேசி சந்தாதாரர்களின் அடையாள விபரங்கள், உள்வரும் மற்றும் வெளியேறும் அழைப்புகளின் பதிவுகள், கையடக்கத் தொலைபேசிகளின் இருப்பிடத் தகவல்கள் உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தொலைபேசி உரையாடல்களின் உள்ளடக்கத்தை அறியாமலேயே ஒருவரின் தொடர்புகள், நடமாட்டங்கள் மற்றும் உறவுகள் தொடர்பான முக்கியமான தகவல்களை இவ்வாறான பதிவுகள் வெளிப்படுத்தக்கூடும் என ஐ.நா நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக, ஊடகவியலாளர்கள் தங்களது செய்திகளுக்காகத் தகவல்களை வழங்கும் இரகசிய மூலங்கள் வெளிப்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுடன் தொடர்புகொள்ளும் சட்டத்தரணிகள், மனித உரிமைப் பாதுகாவலர்களும் இதனால் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய முக்கியமான தொடர்பாடல் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு சுயாதீனமான அனுமதி அவசியம் என்றும், குறிப்பாக நீதித்துறை அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமைத் தரநிலைகள் வலியுறுத்துவதாக ஐ.நா நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் போதுமானதாக இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக 44(5) ஆவது பிரிவில் அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளமை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, தொலைத்தொடர்புகளை இடைமறித்துக் கண்காணித்தல், டிஜிட்டல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் மின்னணு சாதனங்களில் உள்ள மறைகுறியாக்கப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் தொடர்பிலும் ஐ.நா கவலை வெளியிட்டுள்ளது.

இவ்வாறான தகவல்களைச் சேகரித்தல், பயன்படுத்துதல், சேமித்தல் மற்றும் அழித்தல் தொடர்பில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பதுடன், ஊடகவியலாளர்களின் இரகசியத் தகவல் மூலங்கள் மற்றும் சட்டத்தரணிகளின் இரகசியத் தொடர்பாடல்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் போதுமானதாக இல்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இந்தச் சட்டமூலம் தொடர்பில் விரிவான மதிப்பீட்டை மேற்கொண்ட ஐ.நா நிபுணர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை, இலங்கையின் சர்வதேச மனித உரிமைக் கடப்பாடுகளுக்கு அமைவாகச் சட்டமூலம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

சட்டமூலம் தொடர்பில் ஐ.நா சுட்டிக்காட்டியுள்ள 11 முக்கிய கவலைகள் வருமாறு:

1\. ஒரு வருடம் வரை பொலிஸ் தடுப்புக்காவல்

பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளருக்கு, சந்தேகநபர்களை விசாரணைக்காகவும் பொலிஸ் நிலையங்களில் ஒரு வருடம் வரை தடுத்து வைக்க அனுமதி வழங்கும் அதிகாரம் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது சித்திரவதை மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவலுக்கான ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என ஐ.நா எச்சரித்துள்ளது.

2\. நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு முன்னர் 72 மணிநேர பொலிஸ் தடுப்பு

பயண நேரத்தைத் தவிர்த்து 72 மணிநேரம் வரை சந்தேகநபர்களைப் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியும். இதற்கு மேலதிகமாக மேலும் 24 மணிநேர பொலிஸ் தடுப்புக்காவலுக்கும் அனுமதி வழங்கப்படலாம்.

3\. பொலிஸாரிடம் வழங்கப்படும் வாக்குமூலங்கள் நீதிமன்றில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படுதல்

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியிலுள்ள அதிகாரிகளிடம் வழங்கப்படும் வாக்குமூலங்களை நீதிமன்றில் சாட்சியமாகப் பயன்படுத்த முடியும். அச்சுறுத்தல், சலுகைகள் அல்லது வாக்குறுதிகள் மூலம் வாக்குமூலம் பெறப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் சந்தர்ப்பங்களில், அதனை நிரூபிக்கும் பொறுப்பு குற்றஞ்சாட்டப்பட்டவரிடமே ஒப்படைக்கப்படுவது குறித்தும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

4\. நீதிமன்ற நடவடிக்கைகளை அறிக்கையிடும் ஊடகவியலாளர்களுக்குக் கட்டுப்பாடு

சட்டமூலத்தின் கீழ் வரும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை முன் அனுமதியின்றி வெளியிடும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராகச் சிறைத்தண்டனை உள்ளிட்ட குற்றவியல் தண்டனைகள் விதிக்கப்படக்கூடும்.

5\. நீதிமன்ற அனுமதியின்றி தொலைபேசி விபரங்களைப் பெறும் அதிகாரம்

பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவின்றி தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து சந்தாதாரர் விபரங்கள், அழைப்புப் பதிவுகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி இருப்பிடத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனால் ஊடகவியலாளர்களின் இரகசியத் தகவல் மூலங்கள் வெளிப்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.

6\. டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் மறைகுறியாக்கப்பட்ட தகவல்களைப் பெறுதல்

தகவல் தொடர்பாடல்களை இடைமறித்தல், டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் மறைகுறியாக்கப்பட்ட மின்னணுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரங்கள் சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் சுயாதீன மேற்பார்வையும் உள்ளனவா என ஐ.நா கேள்வி எழுப்பியுள்ளது.

7\. தொழிற்சங்கங்கள் மற்றும் போராட்ட இயக்கங்களும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படக்கூடிய அபாயம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்கள் தொடர்பான பரந்த வரைவிலக்கணங்கள் காரணமாக, சில சூழ்நிலைகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போராட்ட இயக்கங்களும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படக்கூடும் என ஐ.நா எச்சரித்துள்ளது.

8\. நீதிமன்ற அனுமதியின்றி வீடுகள் மற்றும் காணிகளைச் சோதனையிடும் அதிகாரம்

கடுமையான குற்றம் தொடர்பில் நியாயமான சந்தேகம் காணப்படும் பட்சத்தில், நீதிமன்ற அனுமதியின்றி வீடுகள் மற்றும் காணிகளுக்குள் நுழைந்து சோதனையிடும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்படலாம். இதற்கு அவசரநிலை அவசியம் என்ற வெளிப்படையான நிபந்தனை குறிப்பிடப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

9\. பிணை மற்றும் நீதித்துறை அதிகாரங்களுக்குக் கட்டுப்பாடுகள்

தடுப்புக்காவல் உத்தரவுகள் அல்லது விளக்கமறியல் தொடர்பான உத்தரவுகளை நடைமுறைப்படுத்துமாறு நீதவான்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், நீதித்துறையின் சுயாதீனத் தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பாதிக்கக்கூடும் என ஐ.நா தெரிவித்துள்ளது. மேலும், பிணை வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனக் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

10\. சிறுவர்களுக்கான தெளிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை

18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை நீண்டகால பொலிஸ் தடுப்புக்காவலில் வைப்பது, தடுப்புக்காவல் உத்தரவுகள் மற்றும் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட விதிமுறைகள் ஆகியவற்றிலிருந்து வெளிப்படையாக விலக்குவதற்கான ஏற்பாடுகள் சட்டமூலத்தில் இல்லை. சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா விளக்கம் கோரியுள்ளது.

11\. அரச அதிகாரிகளுக்கான வழக்குத் தொடர்வதிலிருந்து பாதுகாப்பு

அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதிலிருந்து பாதுகாப்பு வழங்கும் வகையில் பரந்துபட்ட விதிமுறைகள் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்தும் ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இத்தகைய ஏற்பாடுகள் சித்திரவதை, மோசமான நடத்தைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட சம்பவங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளைக் கணக்குக்குக் கொண்டுவருவதற்குத் தடையாக அமையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலம், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள், தனிநபர் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்பதே ஐ.நா நிபுணர்களின் பிரதான வலியுறுத்தலாக உள்ளது.


ஏனைய செய்திகள்

arvoshan.com

2025 ஒக்டோபர் முதல் இதுவரை 11,131 சிறுவர்கள் கைது – பொலிஸ் பேச்சாளர்

...

arvoshan.com

ஜனாதிபதியின் மூன்றாவது வரவு – செலவுத் திட்டத்திற்கு முன்னதாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நாமல் ராஜபக்ஷ கேள்வி

...

arvoshan.com

பல்வேறு குற்றச்சாட்டுகளில் 208 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது; 1,500 பேர் பணி இடைநீக்கம்

...

arvoshan.com

ரிதி விகாரை அபிவிருத்தித் திட்டம்: மாதாந்தம் 5,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலக்கு

...

arvoshan.com

நீரிழிவு நோயை முன்கூட்டியே கண்டறிவது அவசியம்: இரத்தப் பரிசோதனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுகாதார நிபுணர்கள்

...

arvoshan.com

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டங்களுக்கு எதிராக பொல்துவ சந்தியில் போராட்டம்

...

arvoshan.com

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ஷ

...

arvoshan.com

நவம்பர் மாத எரிபொருள் விலைத் திருத்தம்: டீசல் விலை இடைவெளி குறைவு; பெட்ரோல் விலை இடைவெளி அதிகரிப்பு

...

arvoshan.com

ஞானசார தேரர் விடுதலை கோரி நடத்தப்பட்ட போராட்டம்: விதிமீறல்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

...

arvoshan.com

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்கவுக்கு ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அஞ்சலி

...

arvoshan.com

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இலங்கைப் பிரதேசத்தை ஒருபோதும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் – உயர்ஸ்தானிகர்

...

arvoshan.com

இலங்கையின் புதிய குற்றத் தடுப்புச் சட்டமூலத்திற்கு ஐ.நா. கடும் எதிர்ப்பு!

...

arvoshan.com

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றும் ஜனநாயகக் கட்சி – ட்ரம்புக்கு பெரும் அரசியல் பின்னடைவு!

...

arvoshan.com

இலங்கையின் மிக வயதான ஆண் 111ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்; 92 பேரக்குழந்தைகள்!

...

arvoshan.com

ஆற்றில் மூழ்கிய பெண்ணைத் துணிச்சலுடன் காப்பாற்றிய நபர்!

...