யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 2ஆம் திகதி ஆரம்பம்!
யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் 12ஆவது நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் விழா ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுயாதீன சினிமாவைக் கொண்டாடுவதுடன், சினிமாவின் ஆக்கபூர்வமான வெளிப்பாடுகளை ஆராய்வதற்கான பக்கச்சார்பற்ற தளமாகச் செயற்படுவதே யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் பிரதான நோக்கமாகும்.
மேலும், பிற கலாசாரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக சகவாழ்வையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மேம்படுத்துதல், இளம் திரைப்படப் படைப்பாளிகளின் முதலாவது திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களைத் திரையிட்டு அவர்களை ஊக்குவித்தல் ஆகியனவும் இவ்விழாவின் நோக்கங்களாக அமைந்துள்ளன.
Agenda 14 அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படும் இவ்விழாவின் பிரதான அனுசரணையாளர்களாக சிலோன் தியேட்டர்ஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் ஜீவா எடுகேஷன் ஆகியன செயற்படுகின்றன.
அத்துடன், கோதே நிறுவனம், பிரான்ஸ் தூதரகம், அலியான்ஸ் பிரான்செஸ், கியூபா தூதரகம், சரசவி பதிப்பகம் மற்றும் கலம் – கலாசாரச் சந்திப்புகளுக்கான வெளி ஆகியனவும் இவ்விழையின் பங்காளர்களாக இணைந்துள்ளன.
திரைப்படத் திரையிடல்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கார்கில்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள ரீகல் சினிமா மற்றும் கலம் – கலாசாரச் சந்திப்புகளுக்கான வெளி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.
இவ்வாண்டு விழாவில் முழுநீளத் திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் உள்ளிட்ட சுமார் 50 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
பிரான்ஸ், இத்தாலி, பங்களாதேஷ், இந்தியா, ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சவூதி அரேபியா, ஜேர்மனி, தாய்வான், கனடா, ஈரான், கியூபா மற்றும் இலங்கை உள்ளிட்ட 15இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் இதில் இடம்பெறவுள்ளன.
திரைப்படத் திரையிடல்களுக்கு மேலதிகமாக, சினிமாத்துறை தொடர்பான நிபுணத்துவ வகுப்புகள் (Masterclass) மற்றும் சிறப்பு அமர்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
டிசம்பர் 2ஆம் திகதி ஜேர்மன் திரைப்படப் படைப்பாளிகளான ஜூலியா லெம்கே மற்றும் அன்னா கொக் ஆகியோர் இணைந்து இயக்கிய 'சர்க்கஸ்பாய்' (Circusboy) என்ற ஆவணப்படத்தின் திரையிடலுடன் திரைப்பட விழா ஆரம்பமாகவுள்ளது.
86 நிமிடங்கள் கொண்ட இத்திரைப்படம் 2025ஆம் ஆண்டு ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டதாகும்.
ஜேர்மனியின் கடைசிப் பெரும் சர்க்கஸ் இயக்குநர்களில் ஒருவரான தனது பூட்டனாரிடமிருந்து முன்னோர்களின் கதைகளைக் கேட்டுக்கொண்டு, விலங்குகளும் பெரிய குடும்பமும் சூழ வளர்ந்து வரும் சான்டினோ என்ற சிறுவனை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
யதார்த்தத்துக்கும் மாயாஜாலத்துக்கும் இடையில் பயணிக்கும் ஒரு சர்க்கஸ் குடும்பத்தின் வாழ்க்கையை இத்திரைப்படம் சித்தரிக்கிறது.
இதேவேளை, டிசம்பர் 6ஆம் திகதி மாலை நடைபெறவுள்ள விருது வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து, இலங்கைத் திரைப்படப் படைப்பாளியான லலித் ரத்நாயக்க இயக்கிய 'ரிவர்ஸ்டோன்' (Riverstone) திரைப்படம் நிறைவுத் திரைப்படமாகத் திரையிடப்படவுள்ளது.
119 நிமிடங்கள் கொண்ட இத்திரைப்படம் 2025ஆம் ஆண்டு இலங்கையில் தயாரிக்கப்பட்டதாகும்.
இதனுடன் 12ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா நிறைவடையவுள்ளது.