தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் படகு முற்றுகை – 7 பேர் கைது!
இலங்கையின் தெற்கே தொண்டைமான் முனைக்கு அப்பால், சர்வதேச கடற்பரப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் (ICE) போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன், அதிலிருந்த ஏழு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள், சர்வதேச கடல்சார் பங்காளி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்தையும் (EEZ) கடந்து சர்வதேச கடற்பரப்பில் இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட நாடற்ற படகும், கைது செய்யப்பட்ட ஏழு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு அழைத்து வரப்பட்டு, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
பிராந்திய மற்றும் சர்வதேச கடல்சார் பங்காளிகளுடனான வலுவான ஒருங்கிணைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட கடல்சார் கண்காணிப்புத் திறன்களே இந்த நடவடிக்கையின் வெற்றிக்குக் காரணம் எனக் கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது.
செயற்கைக்கோள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து, கடல்சார் அச்சுறுத்தல்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு கொழும்பில் அமைந்துள்ள தகவல் ஒருங்கிணைப்பு நிலையம் (IFC) செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை விமானப்படையுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் வான்வழிக் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஊடாக கடற்பரப்பைக் கண்காணிக்கும் திறன் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் 'ஒன்றிணைந்த தேசம்' (A Nation United) போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் இந்தக் கைப்பற்றல் இடம்பெற்றுள்ளது.
இந்த நடவடிக்கையின் கீழ் இதுவரை 116 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 66 படகுகளும், 18 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 379 சந்தேகநபர்களும் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
சமீபத்திய கைப்பற்றல் தொடர்பான மேலதிக விபரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றும் கடற்படை மேலும் குறிப்பிட்டுள்ளது.